Last Updated : 02 Apr, 2025 05:36 PM

 

Published : 02 Apr 2025 05:36 PM
Last Updated : 02 Apr 2025 05:36 PM

“பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகளை அணி திரட்ட வேண்டும்!” - மதுரை மார்க்சிஸ்ட் மாநாட்டில் பிரகாஷ் காரத் முழக்கம்

மதுரையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி மாநாட்டில் கட்சியின் அரசியல் பணியக ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் உரையாற்றினார் | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: “பாஜவுக்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் அணி திரட்ட வேண்டும்” என மதுரை அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் அக்கட்சியின் அரசியல் பணியக ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் முழங்கினார்.

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 5 நாள் அகில இந்திய 24-வது மாநாடு தமுக்கம் மைதானத்தில் இன்று (ஏப்.2) காலை தொடங்கியது. மாநாட்டில் அரசியல் பணியக ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் பேசியது: “பழந்தமிழ் இலக்கியம், கலாச்சாரத்தின் பண்பாட்டின் செழுமையும், தொழிலாளி வர்க்கம், கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றை ஒருங்கிணைக்கும் நகரமான மதுரையில் இம்மாநாடு நடத்துவது பொருத்தம். இந்த மாநாடு பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி இன்றி ஒரு கடினமான தருணத்தில் நடக்கிறது. இங்கு மூன்று கேள்விகளைக் கேட்கிறேன்.

டொனால்டு ட்ரம்பின் நண்பர் என்று கூறுவது யார்? கவுதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானியின் நெருங்கிய நண்பர் யார்? ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு முழு விசுவாசமாக இருப்பவர் யார்? இந்த மூன்று கேள்விகளுக்கும் ஒரே பதில் மோடியும், பாஜகவும்தான். பிரதமர் மோடியும் அவரது அரசும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நெருக்கமாக இணைந்திருக்கும் இந்துத்துவா - கார்ப்பரேட் உறவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

பாஜக - ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா - கார்ப்பரேட் கூட்டை போராடி தோற்கடிக்க வேண்டும். இவ்வளவு சுலபமான முடிவுக்கு வருவதிலிருந்து பாஜக - ஆர்எஸ்எஸ் கூட்டணியை எவ்வாறு திறம்பட எதிர்த்துப் போராடுவது என்ற சிக்கலான கேள்வி எழுகிறது. கருத்தியல், கலாச்சார மற்றும் சமூகத் துறைகளில் இந்துத்துவா சக்திகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்தத் தருணத்தில் பாஜகவுக்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் அணிதிரட்ட வேண்டும்.

பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் துன்புறுத்தபடுகிறார்கள். இந்துத்துவா வகுப்பு வாதத்துக்கு எதிரான போராட்டத்தையும், புதிய தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தையும் ஒருங்கிணைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதிய துறைகளை தனியார்மயமாக்கி, பெரிய ஏகபோகங்களுக்கு லாபத்தை அதிகரிக்க புதிய பகுதிகளை வழங்குகிறது. இதன் விளைவு நாட்டின் மொத்தச் செல்வத்தில் 40 சதவீதத்தை மக்கள்தொகையில் ஒரு சதவீதத்தினர் வைத்திருப்பதன் மூலம் முன்னோடியில்லாத சமத்துவமின்மையைக் காண்கிறோம்.

அதிகளவில் வேலையின்மை உள்ளது. குறிப்பாக இளைஞர்களிடையே ஒப்பந்தம் மூலம் தொழிலாளர் சுரண்டல் அதிகரித்தது மற்றும் தொழில்துறை துறையில் சேர்க்கப்பட்ட நிகர மதிப்பில் ஊதிய பங்கு, மோசமான விவசாய நெருக்கடியால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் நிலை மோசமாகியுள்ளது. தொழிலாளர்களின் உரிமைகளைக் குறைக்கும் நான்கு தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மே 20-ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

இடதுசாரிக் கட்சிகளும் அனைத்து வர்க்கம், வெகுஜன அமைப்புகளும் இதை வெற்றி பெற செய்யும். மக்களவையில் பாஜக தனது பெரும்பான்மையை இழந்தாலும், அரசியலமைப்பை மீண்டும் வடிவமைக்க எதேச்சதிகார முயற்சியை நிறுத்தவில்லை. லோக்சபா, சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அரசியலமைப்பு திருத்த மசோதா, கூட்டாட்சி மற்றும் மாநிலங்களின் உரிமைகள் மீதான நேரடித் தாக்குதல் ஆகும். தேர்தல் ஆணைய சுதந்திரத்தை சிதைப்பது தொடர்கிறது. பாஜக அல்லாத மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் அப்பட்டமான பாரபட்சம் உள்ளது.

மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்ப்பதில் கேரளாவிலுள்ள எல்டிஎப் அரசு முன்னணியில் உள்ளது. ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பின் மிக அப்பட்டமான வடிவம் இங்கே உள்ளது. பல நாடுகளுக்கு எதிராக டிரம்ப் ஆக்ரோஷமான நடவடிக்கை எடுக்கிறார். இவருக்கு பிரதமர் மோடி தனது விசுவாசத்தை அறிவிக்கிறார். இதன் விளைவு நமது நாட்டுக்கு மிக மோசமாக இருக்கும். காஸாவில் இனப்படுகொலையை எதிர்நோக்கும் பாலஸ்தீன மக்களுக்கு இம்மாநாட்டின் மேடையில் இருந்து முழு ஆதரவை தெரிவிக்கிறோம். பொருளாதார தடையை எதிர்க்கும் கியூபாவை வாழ்த்துகிறோம்” என்று பிரகாஷ் காரத் பேசினார்.

முன்னதாக, கட்சியின் மூத்த தலைவர் பிமான் பாசு கட்சியை கொடியை ஏற்றினார். முன்னாள் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமை வகித்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநாட்டில் கேரளா முதல்வர் பிரனாய் விஜயன், இந்திய கம்யூ பொதுச் செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x