Published : 02 Apr 2025 07:30 AM
Last Updated : 02 Apr 2025 07:30 AM

திருச்சி நூலகத்துக்கு காமராஜர் பெயர்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் க.அன்பழகன், நூலகங்கள் பற்றி பேசியதற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து கூறியதாவது:

திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டிருக்கிற நூலகங்களுக்கு மாபெரும் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கிறது என்ற கருத்தை வெளிப்படுத்தி காட்டியுள்ளார். குறிப்பாக, திருச்சியில் ரூ.290 கோடியில் என்னால் அடிக்கல் நாட்டப்பட்ட மாபெரும் நூலகத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டிருப்பதாக, பொதுப் பணித்துறை 4 ஆண்டு சாதனைகள் தொடர்பான புத்தகத்தில் நான் பார்த்தேன். கருணாநிதியால், கோட்டூர்புரத்தில் திறந்து வைக்கப்பட்ட நூலகத்துக்கு அண்ணா நூற்றாண்டு நூலகம் என்று பெயர் சூட்டப்பட்டது.

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு, ஒரே ஆண்டில் அதன் கட்டுமான பணிகள் முடிவுற்று, மாபெரும் சாதனை செய்யப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது என்பதை எல்லோரும் அறிவர். இதுவரை சுமார் 16 லட்சம் பொது மக்களும், மாணவர்களும் இந்த நூலகத்தால் பயனடைந்திருக்கிறார்கள். அண்மையில் கோவையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டபோது, கோவையில் ஒரு மாபெரும் நூலகம் அமைக்கப்படும் என அறிவித்தேன். கடந்த நவம்பர் மாதம் அதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. அதேபோல், திருச்சியில் அறிவிக்கப்பட்டிருக்கிற நூலகத்துக்கு கடந்த மாதத்தில் நான் அடிக்கல் நாட்டியிருக்கிறேன். இந்த பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

கோவையில் பெரியார், சென்னையில் அண்ணா, மதுரையில் கலைஞர் ஆகியோரின் பெயர்களை தாங்கி நூலகங்கள் நிறுவப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து, திருச்சியில் அமையவிருக்கும் நூலகத்துக்கு காமராஜர் பெயரை சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என நான் கருதுகிறேன். எனவே, தமிழகத்தில் கிராமங்கள்தோறும் பள்ளிகளை தொடங்கி, மதிய உணவு அளித்து, லட்சக்கணக்கான குடும்பங்களின் கல்வி கண்களை திறந்து, தமிழகத்தின் கல்வி புரட்சிக்கும், எதிர்கால வளர்ச்சிக்கும் வித்திட்ட காமராஜர் பெயரை சூட்டுவது பொருத்தமாக இருக் கும் என்று கருதி, திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்துக்கு காமராஜர் பெயர் சூட்டுவதற்கான அரசாணையை பள்ளிக கல்வித்துறை அமைச்சர் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

க.அன்பழகன்: நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள ஊர், நகரம் வரும் போது, வாகனங்களின் வேகத்தை குறைக்க அறிவிப்பு இருக்க வேண்டும். காங்கிரஸ் உறுப்பினர் ரூபி ஆர்.மனோகரன்: திருச்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நூலகத்துக்கு காமராஜர் பெயர் வைத்ததற்காக முதல்வர், துணை முதல்வர், துணை நின்ற அமைச்சர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முடக்கும் வகையில் நிதியை நிறுத்தி வைத்துள்ள மத்திய அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். காமராஜர் தமிழக முதல்வராக இருந்த போது, திருநெல்வேலி மாவட்டத்தில் 1958-ம் அண்டு திருநெல்வேலி அரசு பொது மருத்துவமனையை கட்டினார். அதுவே தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக உயர்ந்துள்ளது. காமராஜரின் செயலை போற்றும் வகையில், அந்த மருத்துவ கல்லூரிக்கு காமராஜர் பெயரை சூட்டி, திருநெல்வேலி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் கட்டுமான திட்டங்களை பதிவு செய்ய 3 மாதங்கள் ஆகிறது. அதனை 15 நாட்களில் பதிவு செய்து கொடுக்க வேண்டும்.

பாமக உறுப்பினர் ச.சிவக்குமார்: பொதுப்பணித்துறை சார்பில் மதுரையில் கலைஞர் நூலகம், கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, சென்னையில் பன்னாட்டு அரங்கம், கோவையிலும் நூலகம். சென்னை தவிர்த்து வடமாவட்டங்களில் பெரிய கட்டுமான திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. அதனால், திண்டிவனத்தில் பெரிய நூலகம் அமைக்க வேண்டும்.

திண்டிவனம் - கிருஷ்ணகிரி சாலை 2 வழிச்சாலையாக உள்ளது. இதை 4 வழிச்சாலையாக அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்ட மதிப்பை தயார் செய்துள்ளது. பணிகளை விரைந்து தொடங்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். மயிலத்தை தலைமையிடமாகக் கொண்ட புதிய தாலுகாவை அமைக்க வேண்டும். 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும் போது ஐபிஎல் போட்டியை நடத்தக் கூடாது. தேர்வு முடிந்த பிறகு நடத்தலாம். அதேபோல், ஐபிஎல் டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை தடுக்க துணை முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசிடம் பேசி, சுங்கக்கட்டணத்தை குறைக்க வேண்டும்.

கட்டுமான பொருட்கள் விலை உயர்வு - அதிமுக உறுப்பினர் ரா.மணி: அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் எண்ணற்ற நெடுஞ்சாலைகள் புதிதாக போடப்பட்டன. தமிழகத்தில் உள்ள சாலைகளை பழுது பார்ப்பதற்கு நெடுஞ்சாலைத்துறையில் 25 ஆயிரம் பணியாளர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நியமனமும் நடைபெற்ற மாதிரி தெரியவில்லை. இந்த துறை
யின் கொள்கை விளக்க குறிப்பிலும் புதிதாக எதுவும் இடம்பெறவில்லை. பெயர்மாற்றி பழைய திட்டங்களையே மீண்டும் குறிப்பிட்டுள்ளனர். கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவதுடன், தட்டுப்பாடும் அதிகளவில் இருக்கிறது. இதனால் அரசின் திட்டங்கள் முடிவ
தில் தாமதம் ஏற்படுவதுடன், பொது மக்களும் தங்கள் கட்டுமான பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வரு
கின்றனர். சேலம் விமான நிலையத்துக்கு செல்லும் சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x