Published : 02 Apr 2025 04:31 AM
Last Updated : 02 Apr 2025 04:31 AM

சுங்கக்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: மத்திய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட், பாமக, விசிக வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் உயர்த்தப்பட்டிருக்கும் சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் , பாமக, விசிக கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது இந்த கோரிக்கையை வலியுறுத்தினர்.

பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி: சுங்கச்சாவடிகளில் ஏற்கெனவே அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் 5 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியையும், அதிருப்தியையும் பொதுமக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது.

சில சுங்கச்சாவடிகளில் கால அளவை தாண்டி வசூலித்து கொண்டிருக்கின்றன. சுங்கச்சாவடிகளின் இடைவெளி குறைக்கப்பட்டு, அதன் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. இவையெல்லாம் கண்டனத்துக்குரியதாகும். பொதுமக்களின் மீது நிதிச்சுமையை கூட்டியிருக்கும் சுங்கக்கட்டணம் உயர்வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.

விசிக எம்எல்ஏ சிந்தனைச்செல்வன்: மாநில அரசை கலந்தாலோசிக்காமல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் சுங்கக்கட்டணங்களை உயர்த்துவது மோசமான ஒடுக்குமுறையாகும். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தற்போது ஏறக்குறைய ரூ.150 வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது சுங்கக்கட்டண வசூல் அல்ல. கொள்ளை. குறிப்பாக கடலூர் - சிதம்பரம் இடையே கொத்தட்டை சுங்கச்சாவடி கடந்த ஒரு மாதம் முன்புதான் பணிகள் முழுமைபெறாமலே திறக்கப்பட்டது. அதிலும் தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்: இதற்கிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் கடந்த 2019 முதல் 2024 மார்ச் மாதம் வரை ரூ.15,414 கோடி சுங்கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆண்டுக்கு சராசரியாக ரூ.3 ஆயிரம் கோடி சுங்கக்கட்டணத்தில் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் மேலும் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது சட்டப்பூர்வமான கொள்ளையாகும். இதன் விளைவாக அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயரும். எனவே கட்டண உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x