Published : 02 Apr 2025 04:11 AM
Last Updated : 02 Apr 2025 04:11 AM
சென்னை: ‘காவிரி - வைகை - குண்டாறு வெள்ளநீர் இணைப்புக் கால்வாய் திட்டம் நாங்கள் பெற்றெடுத்த பிள்ளை என்பதால் அதை விட்டுவிட மாட்டோம்’ என்று சட்டப்பேரவையில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்ட பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாக விராலிமலை தொகுதி அதிமுக எம்எல்ஏ. சி.விஜயபாஸ்கர் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அளித்த பதில் வருமாறு:
2008-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி, காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தை அறிவித்தார். காவிரி வெள்ள நீரை வறட்சி பாதித்த மாவட்டங்களில் பயன்படுத்துவதற்கான இந்த இணைப்புக் கால்வாய் திட்டம் 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டம் காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரை 118.450 கி.மீ., இரண்டாம் கட்டம் தெற்கு வெள்ளாறு முதல் வைகை வரை 109.695 கி.மீ., மூன்றாம் கட்டம் வைகை முதல் குண்டாறு வரை 34.045 கி.மீ. ஆக மொத்தம் 262.190 கி.மீ.க்கு வெள்ளநீர் இணைப்புக் கால்வாய் அமைக்கப்படும்.
அதன்பிறகு முதல் கட்டத்தில் 45,876 ஏக்கர், இரண்டாம் கட்டத்தில் 66,356 ஏக்கர், மூன்றாம் கட்டத்தில் 16,258 ஏக்கர் பாசன நிலங்கள் மேம்படுத்தப்படும். முதல் கட்டமாக மாயனூர் (கட்டளை) முதல் தெற்கு வெள்ளாறு (கவிநாடு மேற்கு) வரை 118.45 கி.மீ நீளத்துக்கு 8 பாகங்களாகப் பிரித்து செயல்படுத்த ரூ.6,941 கோடிக்கு கொள்கை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அதற்காக கரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நிலமெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கரூர் மாவட்டத்தில் 427.81 ஹெக்டேர் பட்டா நிலங்களை கையகப்படுத்தவும், 36.21 ஹெக்டேர் புறம்போக்கு நிலங்களை நிலமாற்றம் செய்யவும், திருச்சி மாவட்டத்தில், 200.41 ஹெக்டேர் பட்டா நிலங்களை கையகப்படுத்தவும், 18.62 ஹெக்டேர் புறம்போக்கு நிலங்களை நில மாற்றம் செய்யவும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 608.03 ஹெக்டேர் பட்டா நிலங்களை கையகப்படுத்தவும், 103.51 ஹெக்டேர் புறம்போக்கு நிலங்களை நிலமாற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிலம் எடுப்பைப் பொருத்தவரை 85 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளன. கால்வாய் அமைக்கும் பணிக்காக கரூர் மாவட்டம் நெடுகை 0 முதல் 4.100 கி.மீ வரையிலும், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நெடுகை 54.695 முதல் நெடுகை 60.050 வரையிலான பகுதிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
இப்பணிக்கு 2021-22-ல் ரூ.146.57 கோடி ஒதுக்கி, அதில் ரூ.116.22 செலவிடப்பட்டு 47 சதவீதம் கால்வாய் வெட்டும் பணிகள் முடிந்தன. 2022-23 மற்றும் 2023-24-ல் ரூ.176.52 கோடி ஒதுக்கி, அதில் ரூ.128.51 கோடி செலவிடப்பட்டு 86 சதவீதம் கால்வாய் வெட்டும் பணிகள் முடிந்துள்ளன. 2024-25-ல் ரூ.50.50 கோடி ஒதுக்கீடு செய்து, தற்போது வரை ரூ.33.48 கோடி செலவிடப்பட்டு 89 சதவீத கால்வாய் வெட்டும் பணிகள் முடிந்து, பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தற்போது பணிகள் நடைபெறும் பகுதிகள் தவிர நிலம் எடுப்புப் பணிகள் 96 சதவீதம் முடிவுற்ற கரூர், திருச்சி மாவட்டங்களில் நெடுகை 4.100 கி.மீ. முதல் 54.695 வரை 8 பகுதிகளாகப் பிரித்து ரூ.3,076.32 கோடிக்கு மதிப்பீடு தயாரித்து அரசு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இரண்டு மற்றும் மூன்றாம் கட்டப் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது.
காவிரி - வைகை - குண்டாறு வெள்ளநீர் இணைப்புக் கால்வாய் திட்டம் என்பது நாங்கள் பெற்ற பிள்ளை. அதை விட்டுவிட மாட்டோம். இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment