Last Updated : 01 Apr, 2025 05:19 PM

3  

Published : 01 Apr 2025 05:19 PM
Last Updated : 01 Apr 2025 05:19 PM

“ஆர்எஸ்எஸ் பிரச்சார பீரங்கியாக மோடி... கார்ப்பரேட் ஆதரவாக அமித் ஷா...” - டி.ராஜா விமர்சனம்

டி.ராஜா | கோப்புப் படம்

மதுரை: “ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரச்சார பீரங்கியாகவே பிரதமர் மோடி செயல்படுகிறார். கனிம வளங்களை தனியாருக்கு தாரை வார்க்க மலைவாழ் மக்களை விரட்டுகின்றனர்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறினார்.

மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 24-வது அகில இந்திய மாநாட்டுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் பெங்களூரில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர். மதுரை விமான நிலையம் வந்த அவர்களுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் டி.ராஜா கூறியது: “இந்தியாவில் ஆளுகிற பாஜக ஆட்சி ஒரு மக்கள் விரோத ஆட்சி என்பது தெளிவாகிறது. ஆர்எஸ்எஸ் கொள்கைகளை பின்பற்றக் கூடிய கட்சியாக பாஜக மாறியிருக்கிறது. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டலுக்காக செயல்படுகிற ஒரு அரசாக அக்கட்சி திகழ்கிறது. இதன் பின்னணியில் உலகின் பெயரால் கல்விக் கொள்கையின் பெயரால் இந்திய கூட்டாட்சி நெறிமுறைகளை தகர்த்து எறிகிற ஒரு அரசாக செயல்படுகிறது. இந்த ஆட்சியில் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும், மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இடதுசாரி கட்சிகள் ஒன்றுபட்டு செயல்படுகிறோம்.

நாடு காப்பாற்றப்பட வேண்டும் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் மோடி அரசு தோற்கடிக்கப்பட வேண்டும். தமிழக முதல்வர் மொழிக் கொள்கை, கல்விக் கொள்கை உள்ளிட்டவைகளில் ஒரு முன்மாதிரியாக செயல்படுகிறார். இந்திய ஒற்றுமை காக்கப்பட வேண்டும். மாநில உரிமைகள், தமிழ்நாடு உரிமைகள் காக்கப்பட வேண்டும் என தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தமிழக முதல்வருக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறோம்.

மோடியை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். ஆர்எஸ்எஸ்ஸின் பிரச்சாரகராகவே பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். ஆர்எஸ்எஸ்ஸின் எடுபிடியாகத்தான் இருந்து வருகிறார். ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றது ஒரு பெரிய வியப்புக்குரிய செயல் இல்லை.

பிரதமர் மோடி வெளியில் சுதந்திரமாக இருப்பதாக கூறி வருகிறார். ஆனால், பாரதிய ஜனதா கட்சியை ஆர்எஸ்எஸ் தான் ஆட்டி வைக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தையே ஏற்றுக் கொள்ளாத ஓர் இயக்கம் தான் ஆர்எஸ்எஸ். அம்பேத்கரின் அரசியல் அமைப்பு சட்டத்தை மதிக்காமல் இந்தியாவை மதவாத அடிப்படையில் பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. அதை முறியடிக்கும் போராட்டத்துக்கு இடதுசாரிகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது.

அமித் ஷா நாட்டின் அரசியலமைப்பு சட்டப்படி பதவி ஏற்றிருக்கிறார். ஆனால், அவர் அதுபோல் பேசவில்லை நக்சலைட்டுகள் இல்லாத பாரதம் என்று கூறுகிறார். இன்றைக்கு சத்தீஸ்கர் மாநிலத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது. சத்தீஸ்கர் மாநில மலைப்பகுதியில் வசிக்கக்கூடிய ஆதிவாசிகளை துரத்தி அடித்து விட்டால், அங்கு இருக்கக்கூடிய கனிம வளங்களை எல்லாம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொடுத்து விடலாம் என்ற நோக்கத்தில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

உள்துறை அமைச்சராக இருப்பவர் பொறுப்போடு பேச வேண்டும். நாடு காப்பாற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே மதவாத சக்திகளுக்கு எதிராக போராடுபவர்களுக்கு இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு தெரிவிக்கும்” என்று அவர் கூறினார். வாசிக்க > “இடதுசாரி தீவிரவாத மாவட்டங்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைந்துள்ளது” - அமித் ஷா

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x