Published : 01 Apr 2025 03:08 PM
Last Updated : 01 Apr 2025 03:08 PM

திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்துக்கு ‘காமராஜர்’ பெயர் - பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்துக்கு காமராஜரின் பெயர் சூட்டுவதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிட வேண்டுமென்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில், இன்று (ஏப்.1) கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் நூலகங்கள் பற்றிப் பேசும்போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்: “திராவிட மாடல் ஆட்சியில் உருவாக்கப்பட்டிருக்கிற நூலகங்களுக்கு மாபெரும் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கிறது என்ற கருத்தினை வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார்.

அதிலே குறிப்பாக, பொதுப் பணித் துறை சார்ந்த நான்கு ஆண்டு சாதனைகள் தொடர்பான புத்தகத்தில், ஏற்கெனவே இந்த அவையில் அறிவிக்கப்பட்டவாறு, திருச்சியில் 290 கோடி ரூபாய் செலவில் என்னால் அடிக்கல் நாட்டப்பட்ட மாபெரும் நூலகத்துக்கு மறைந்த முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டிருப்பதாக நான் பார்த்தேன்.

திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரையில், கருணாநிதியின் கரங்களால் கோட்டூர்புரத்தில் திறந்து வைக்கப்பட்ட நூலகத்துக்கு அண்ணா நூற்றாண்டு நூலகம் என்று பெயர் சூட்டப்பட்டது. மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு, ஒரே ஆண்டில் அதன் கட்டுமானப் பணிகள் முடிவுற்று, மாபெரும் சாதனை செய்யப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

இதுவரை சுமார் 16 லட்சம் பொது மக்களும், மாணவர்களும் இந்த நூலகத்தால் பயனடைந்திருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து, அண்மையில் கோவையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்ட போது, கோவையில் ஒரு மாபெரும் நூலகம் அமைக்கப்படும் என்று என்னால் அறிவிக்கப்பட்டு, கடந்த நவம்பர் மாதம் அதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

அதேபோன்று, திருச்சியில் அறிவிக்கப்பட்டிருக்கிற நூலகத்துக்கு கடந்த மாதத்தில் நான் அடிக்கல் நாட்டியிருக்கிறேன். இந்தப் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.கோவையில் பெரியார், சென்னையில் அண்ணா, மதுரையில் கலைஞர் ஆகியோர்களின் பெயர்களைத் தாங்கி நூலகங்கள் நிறுவப்பட்டுள்ளதோ, அதனைத் தொடர்ந்து, திருச்சியில் அமையவிருக்கும் நூலகத்துக்கு காமராஜரின் பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என நான் கருதுகிறேன்.

எனவே, தமிழகத்தில் கிராமங்கள்தோறும் பள்ளிகளைத் தொடங்கி, மதிய உணவு அளித்து, லட்சக்கணக்கான குடும்பங்களின் கல்விக் கண்களைத் திறந்து, தமிழகதின் கல்விப் புரட்சிக்கும், எதிர்கால வளர்ச்சிக்கும் வித்திட்ட பெருந்தலைவர் காமராஜரின் பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதி, திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்துக்கு காமராஜரின் பெயர் சூட்டுவதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிட வேண்டுமென்று முதல்வர் என்ற முறையில் கேட்டுக் கொள்கிறேன்.” என்று பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x