Published : 01 Apr 2025 01:48 PM
Last Updated : 01 Apr 2025 01:48 PM

‘மத்திய அரசின் சுங்கக் கட்டண உயர்வு சட்டப்பூர்வ கொள்ளை’ - முத்தரசன் கண்டனம் 

முத்தரசன் | கோப்புப்படம்

சென்னை: “மத்திய அரசு அறிவித்துள்ள சுங்கக் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய கம்யூ. கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்”, என வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மத்திய அரசு நவ தாராளமயக் கொள்கையை ஏற்று, தனியார்மயத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக நான்கு வழி, ஆறு வழி மற்றும் எட்டு வழிச் சாலைகள் என்ற கட்டமைப்பு திட்டங்கள் தனியார் வசம் கட்டுதல், இயக்குதல் மற்றும் ஒப்படைத்தல்(பிஓடி) திட்டத்தின் கீழ் ஒப்படைத்து அவர்களுக்கு சுங்க சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்கும் உரிமையை வழங்கியுள்ளது.

இப்படி சுங்க சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்பட்டு வருகின்றது. இந்த முறையில் இன்று முதல் (ஏப்.1) தமிழகத்தில் உள்ள 46 சுங்கச் சாவடிகளில் 3 முதல் 12 சதவீதம் வரை உயர்த்தப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் புதிதாக 12 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சாலை அமைப்புத் திட்டத்தில் தனியார் நிறுவனம் முதலீடு செய்துள்ள தொகைக்கு எத்தனை ஆண்டுகள் சுங்க வசூலிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. கட்டண உயர்வு செய்வதை அனுமதிப்பதால் சுங்கம் வசூலிக்கும் காலம் குறையுமா? பிஓடி, பிபிபி திட்டங்களில் அமைக்கப்படும் சாலைகள் எந்த ஆண்டு அரசுடைமையாகும்? என்பது போன்ற வினாக்கள் எழுகின்றன.

இவற்றில் அரசின் நடவடிக்கை வெளிப்படையாக அமையவில்லை. கடந்த 2019 முதல் 2024 மார்ச் முடிய ரூபாய் 15 ஆயிரத்து 414 கோடி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சராசரியாக ரூ.3000 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணத்தில் மேலும் மூன்று முதல் 12 சதவீதம் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது சட்டபூர்வ கொள்ளையாகும்.

இதன் காரணமாக தமிழகத்தில் பெரிய, சிறிய வாகனங்கள், குறிப்பாக பொருள் போக்குவரத்து வாகனங்கள் செலுத்தும் கட்டணம் உயர்ந்து வருகிறது.

கடந்த 2022-ம் நிதியாண்டில் வசூலிக்கப்பட்ட சுங்கக் கட்டணம் 2023-ம் நிதியாண்டில் 41 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. இதுதொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இனி நாளொன்றுக்கு மூன்று கோடி ரூபாய் சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

இதன் விளைவாக அத்தியாவசிய உணவுப் பண்டங்கள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர்ந்து மக்கள் தலையில் சுமையாக விழுவது பற்றி கவலைப்படாத பாஜக மத்திய அரசு, இதன் மூலம் பெரும் குழும நிறுவனங்களின் லாபம், மேலும் லாபம் பெறுவதை ஆதரித்து நிற்கிறது. மத்திய அரசின் மக்கள் விரோத சுங்கக் கட்டண உயர்வுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டனம் தெரிவிப்பதுடன், அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்” என்று அவர் கூறியள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x