Published : 01 Apr 2025 06:30 AM
Last Updated : 01 Apr 2025 06:30 AM
சென்னை: சென்னையில் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடந்த சிறப்பு தொழுகையின்போது இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
இஸ்லாமியர்களின் புனித மாதமாக ரமலான் கருதப்படுகிறது. இந்த மாதத்தில்தான் இஸ்லாமியர்களின் முக்கியமான 5 கடமைகளில் ஒன்றான நோன்பு நோற்பது கடைபிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ரமலான் பிறைதொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு தொடங்குவர்.
இந்த ஆண்டு ரம்ஜான் நோன்பு, கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கியது.நோன்பு காலம் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் பிறை தென்பட்டதால், தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை பிராட்வே டான் பாஸ்கோ பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மார்க்கப் பிரிவான இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை சார்பில் ரம்ஜான் பெருநாள் சிறப்பு கூட்டுத் தொழுகை நடைபெற்றது.
இனிப்பு வழங்கி மகிழ்ச்சி: இந்த சிறப்பு கூட்டுத் தொழுகையில், தமுமுக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ, கலந்து கொண்டு தொழுகை உரை நிகழ்த்தினார். இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். கூட்டுத் தொழுகை முடிவடைந்ததும் இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
பின்னர், இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோல, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் சார்பில் மண்ணடி அரண்மனைக்காரன் தெரு பின்னி கார் பார்க் வளாகத்தில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது.
இதில் மாநில செயலாளர் சபீர் அலி கலந்து கொண்டு பெருநாள் உரையாற்றினார். மேலும், சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானம், திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல், பெரியமேடு பள்ளிவாசல், மண்ணடி ஈத்கா, ஆயிரம்விளக்கு மசூதி உட்பட சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பல்வேறு இடங்களிலும் ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று கூட்டுத் தொழுகை நடைபெற்றது.
பள்ளி வாசல்கள் முன்பு கூடியிருந்த ஏழைகளுக்கு முஸ்லிம்கள் புத்தாடை, உணவு வழங்கினர். ஒரு சில இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. ரம்ஜான் தொழுகை நடைபெற்ற அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தலைவர்கள் வாழ்த்து: ரம்ஜான் பண்டிகையை யொட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். தவெக தலைவர் விஜய் ஆகியோர் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment