Published : 01 Apr 2025 06:15 AM
Last Updated : 01 Apr 2025 06:15 AM

கடலோர காவல்​படை​யில் பெண்​களுக்​கும் ஏராள​மான வேலை​வாய்ப்பு: ஓய்​வு​பெற்ற அதி​காரி நா.சோமசுந்​தரம் தகவல்

கலாம் சபா நூலகம் வழிகாட்டி மையம் சார்பில், ‘கடலோரக் காவல் படையும், வேலைவாய்ப்புகளும்’ என்ற தலைப்பில் மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பங்கேற்ற கலாம் சபா நிறுவனர் ராணுவ விஞ்ஞானி வி.டில்லி பாபு, ஓய்வுபெற்ற இந்தியக் கடலோர காவல்படை அதிகாரி நா.சோமசுந்தரம், ‘ஆளுமை சிற்பி’ மாத இதழின் ஆசிரியர் முனைவர் மெ.ஞானசேகர். | படம்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: இந்​திய கடலோர காவல்​படை​யில் ஆண்​கள் மட்​டுமின்றி பெண்​களுக்​கும் ஏராள​மான வேலை​வாய்ப்​பு​கள் உள்ளன என்று ஓய்வு பெற்ற கடலோர காவல்​படை அதி​காரி கமாண்​டன்ட் நா.சோமசுந்​தரம் தெரி​வித்​தார். ராணுவ விஞ்​ஞானி வி.டில்லி பாபு, சென்னை வியாசர்​பாடி மல்​லிகைப்பூ காலனி​யில் உள்ள தனது இல்​லத்​தில் ‘கலாம் சபா’ நூல​கம் மற்​றும் வழி​காட்டி மையத்தை நடத்தி வரு​கிறார்.

வடசென்னை பள்ளி மற்​றும் கல்​லூரி மாணவர்​களின் பயன்​பாட்​டுக்​காக அமைக்​கப்​பட்​டுள்ள இந்த மையத்​தில், பள்ளி மாணவர்​கள் மேற்​படிப்பு வாய்ப்​பு​களை அறிந்து கொள்​ள​வும், கல்​லூரி மாணவர்​கள் வேலை வாய்ப்​பு​கள், போட்​டித் தேர்​வு​கள் பற்​றிய புரிதல்​களை பெற​வும் பல்​துறை வல்​லுநர்​கள் பங்​கேற்​கும் மாதாந்​திர கலந்​தாய்வு கூட்​டம் நடத்​தப்​பட்டு வரு​கிறது.

அந்த வகை​யில், ‘கடலோரக் காவல்​படை​யும், வேலை​வாய்ப்​பு​களும்’ என்ற தலைப்​பில் மாணவர்​களுக்​கான வழி​காட்டி நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது. ‘ஆளுமை சிற்​பி’ மாத இதழின் ஆசிரியர் மெ.​ஞான​சேகர் வரவேற்​புரை ஆற்​றி​னார்.

ராணுவ விஞ்​ஞானி வி.டில்லி பாபு தனது அறி​முக உரை​யில், “ராணுவத்​துக்கு துணை​யாக துணை ராணுவப் படைகளும், கடற்​படைக்கு துணை​யாக இந்​திய கடலோர காவல்​படை​யும் உள்​ளன. துணை ராணுவப் படைகள் மத்​திய உள்​துறை அமைச்​சகத்​தின் கீழும், கடலோர காவல்​படை மத்​திய பாது​காப்​புத் துறை​யின் கீழும் செயல்​படு​கின்​றன. இது இத்​துறை​யின் சிறப்​பான விஷ​யம்” என்​றார்.

நிகழ்ச்​சி​யில், ஓய்​வு​பெற்ற கடலோர காவல்​படை அதி​காரி கமாண்​டன்ட் நா.சோமசுந்​தரம் பேசி​ய​தாவது: இந்​திய கடலோர காவல்​படை கடந்த 1977-ம் ஆண்டு பிப்​.1-ம் தேதி தொடங்​கப்​பட்​டது. ஆரம்​பத்​தில் கடற்​படை​யிடம் இருந்து 2 கப்​பல்​களை கடன் வாங்கி தொடங்​கப்​பட்ட இப்​படை​யில் தற்​போது 150 கப்​பல்​கள் உள்​ளன. இவை தவிர, 24 டார்​னியர் ரக விமானங்​கள், 4 நவீன இலகு ரக ஹெலி​காப்​டர்​கள் மற்​றும் 17 சேட்​டக் ஹெலி​காப்​டர்​கள் உள்​ளன. 10 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மாலுமிகள் உள்​ளனர்.

கடல் எல்​லை, கடல் வளங்​கள், கடல் சுற்​றுச்​சூழல் ஆகிய பாது​காப்பு பணி​களை கடலோர காவல்​படை மேற்​கொள்​கிறது. குறிப்​பாக, கப்​பல் மூலம் நடை​பெறும் கடத்​தலை தடுப்​பது, எண்​ணெய் கசிவு​களை தூய்​மைப்​படுத்​து​வது உள்​ளிட்ட பணி​களை செய்து வரு​கிறது. அத்​துடன், சுனாமி, புயல் போன்ற இயற்கை சீற்​றங்​கள் ஏற்​படும்​போது கடலில் சிக்​கித் தவிக்​கும் மீனவர்​கள், அவர்​களது படகு​கள் உள்​ளிட்​ட​வற்றை மீ்ட்​கும் பணி​களை​யும் செய்து வரு​கிறது.
கடலோர காவல்​படை​யில் ஆண்​கள் மட்​டுமின்றி பெண்​களுக்​கும் ஏராள​மான வேலை​வாய்ப்​பு​கள் உள்​ளன.

இப்​படை​யில் சேரும் அதி​காரி​களுக்கு ஆரம்​பத்​திலேயே ரூ.1 லட்​சத்​துக்​கும் அதி​க​மான ஊதி​யம் கிடைக்​கும். அத்​துடன், பணி பாது​காப்​பு, ரூ.1 கோடிக்​கான மருத்​து​வக் காப்​பீடு, கேண்​டீனில் மானிய விலை​யில் வீட்டு உபயோகப் பொருட்​கள் உள்​ளிட்ட பல்​வேறு சலுகைகள் வழங்​கப்​படு​கிறது.

கடற்​படை​யிலும் ஏராள​மான வேலை​வாய்ப்​பு​கள் உள்​ளன. இந்த வாய்ப்​பு​களை இளைஞர்​கள் பயன்​படுத்​திக் கொண்​டு, தாங்​கள் முன்​னேறு​வதுடன், தங்​களை சுற்​றி​யுள்ள சமூகத்​தை​யும் முன்​னேற்ற வேண்​டும். இவ்​வாறு சோமசுந்​தரம் கூறி​னார். பின்​னர், மாணவர்​களின் பல்​வேறு கேள்வி​கள் மற்​றும் சந்​தேகங்​களுக்கு சோமசுந்​தரம் விடை அளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x