Published : 01 Apr 2025 06:46 AM
Last Updated : 01 Apr 2025 06:46 AM
சென்னை: தமிழகத்தில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
தமிழகத்தில் மொத்தம் 5,381 கி.மீ. தூரத்துக்கு நெடுஞ்சாலைகள் உள்ளது. இந்த நெடுஞ்சாலைகளில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 78 சுங்கச்சாவடிகள் நிறுவப்பட்டு, சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை, 2 கட்டங்களாக ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். இதன்படி சுங்கக் கட்டணம் 5 சதவீதத்தில் இருந்து 10 வரை உயர்த்தி வசூலிக்கப்படும்.
அந்த வகையில் நடப்பாண்டில் தமிழகத்தில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் முதல்கட்டமாக 40 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை ஏப். 1-ம் தேதி முதல் உயர்த்தி வசூலிக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், சுங்கச்சாவடிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. அதன்படி சென்னையை அடுத்துள்ள வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகள், சென்னை - கொல்கத்தா நெடுஞ்சாலையில் உள்ள நெல்லூர் சுங்கச்சாவடி, தாம்பரம் - திண்டிவனம் நெடுஞ்சாலையில் உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடி, செங்கல்பட்டில் உள்ள பரனூர் ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல் சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், பட்டரைப்பெரும்புதூர், அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி, நாங்குநேரி, பள்ளிக்கொண்டா, புதுகோட்டை மாவட்டம் வாகைகுளம், எஸ்வி புரம், சாலைபுதூர், வாணியம்பாடி, திருப்பாச்சேத்தி உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
கார், ஜீப், வேன், ஆட்டோ, லாரி, பேருந்துகள் என ஒவ்வொரு வகை வாகனங்களுக்கு ஏற்ப 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கார் உள்ளிட்ட 4 சக்கர இலகு ரக வாகனங்களுக்கு ரூ.5 கூடுதலாக வசூலிக்கப்படும். பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு அச்சுகள் எண்ணிக்கை அடிப்படையில் ரூ.15 முதல் ரூ.30 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டணங்கள் தொடர்பான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணைய இணையதளத்தில் கட்டண விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
சென்னையை அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் ரூ.5 முதல் ரூ.25 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன், இலகுரக வாகனங்கள் ஒரு முறை செல்வதற்கு ரூ.75, இலகுரக வர்த்தக வாகனங்கள் செல்வதற்கு ரூ.120, பேருந்துகளுக்கு ரூ.255, வர்த்தக வாகனங்கள் செல்வதற்கு ரூ.275, கனரக கட்டுமான எந்திர வாகனங்கள் செல்வதற்கு ரூ.400, பெரிய வாகனங்கள் செல்வதற்கு ரூ.485 கட்டணமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் சென்று திரும்புவதற்கும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
வானகரம் சுங்கச்சாவடியில் ரூ.5 முதல் ரூ.15 வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இங்கு கார், ஜீப், வேன் போன்ற இலகுரக வாகனங்கள் ஒரு முறை செல்வதற்கு ரூ.55, இலகுரக வர்த்தக வாகனங்கள் செல்வதற்கு ரூ.90, பேருந்துகளுக்கு ரூ.185, வர்த்தக வாகனங்கள் செல்வதற்கு ரூ.200, கனரக கட்டுமான எந்திர வாகனங்கள் செல்வதற்கு ரூ.290, பெரிய வாகனங்கள் செல்வதற்கு ரூ.350 வசூலிக்கப்படும். சூரப்பட்டு சுங்கச்சாவடியில் கார் போன்ற இலகுர வாகனங்கள் ஒரு முறை செல்வதற்கு ரூ.75, இலகுரக வர்த்தக வாகனங்கள் செல்வதற்கு ரூ.120, பேருந்துகளுக்கு ரூ.255, வர்த்தக வாகனங்கள் செல்வதற்கு ரூ.280, கனரக கட்டுமான எந்திர வாகனங்கள் செல்வதற்கு ரூ.400, பெரிய வாகனங்கள் செல்வதற்கு ரூ.490 வசூலிக்கப்படவுள்ளது.
சுங்கக்கட்டணம் உயர்வு அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்கும் எனவும், இதனால் மக்கள் சிரமப்படுவார்கள் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...