Published : 01 Apr 2025 06:05 AM
Last Updated : 01 Apr 2025 06:05 AM

இந்த ஆண்டுக்குள் காசநோயை முற்றிலுமாக அகற்ற நடவடிக்கை: தமிழக சுகாதார துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் 21,740 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டுக்குள் நோயை முற்றிலுமாக ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக, 2025-க்குள் அந்நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழகத்தைப் பொருத்தவரை காசநோயைக் குணப்படுத்தும் விகிதம் கணிசமாக உயர்ந்து வருகிறது.

காச நோய் தாக்கத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 84 சதவீதம் பேர் முதல்கட்ட சிகிச்சையிலேயும், தொடர் சிகிச்சைகள் மூலம் மீதமுள்ளவர்களும் குணப்படுத்தப்படுகின்றனர். சிகிச்சை காலத்தில் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து அளிப்பதற்காக நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகிறது என்று தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நாடுமுழுவதும் நடப்பாண்டில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளின் தரவுகளை ஆய்வு செய்ததில், 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் காசநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 1.65 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நடப்பாண்டில் 21,740 பேருக்கு காசநோய் பாதிப்புள்ளது. அதில், தனியார் மருத்துவமனைகளில் 5,700 பேரும், அரசு மருத்துவமனைகளில் 16,040 பேரும் முதல்கட்ட சிகிச்சை பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் தமிழகத்தில் 22,870 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x