Published : 01 Apr 2025 05:36 AM
Last Updated : 01 Apr 2025 05:36 AM
சென்னை: பெற்றோர் தங்களுக்குள் சண்டையிட்டு, விவாகரத்து முடிவுக்கு வந்ததால் மனமுடைந்த இரு மகள்கள் மெரினா கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் தொழில் அதிபர் ஒருவர் மனைவி, இரு மகள்களுடன் வசிக்கிறார். மனைவி வீட்டிலேயே இருக்கும் நிலையில், திருமணமாகாத 23 வயதுடைய மூத்த மகள் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். 20 வயதுடைய 2-வது மகள் கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில், திருமணமான நாளிலிருந்து தொழில் அதிபரும் அவரது மனைவியும் அடிக்கடி குடும்ப விவகாரம் தொடர்பாக சண்டையிட்டு வந்துள்ளதாக தெரிகிறது. குழந்தைகள் பெரியவர்களான பின்பும் இந்த குடும்ப சண்டை நீடித்துள்ளது.
ஒருகட்டத்தில் கணவரிடமிருந்து மனைவி விவாகரத்து கோரி உள்ளார். இதை கேட்டு இரு பெண் பிள்ளைகளும் அதிர்ச்சி அடைந்தனர். பெற்றோர் விவாகரத்து பெற்று தனியாக பிரிந்து விட்டால் நமது எதிர்காலம் என்னவாகும் என அச்சம் அடைந்தனர். இதனால் கடும் மனஉளைச்சலில் இருந்த சகோதரிகள் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று முன்தினம் இரவு மெரினா கடற்கரைக்கு வந்துள்ளனர்.
பின்னர், விவேகானந்தர் இல்லம் எதிரே நள்ளிரவு 11.45 மணிக்கு கடலில் இறங்கியுள்ளனர். அப்போது, அந்த வழியாக ரோந்து வந்த மெரினா காவல் நிலைய தலைமைக் காவலர் குமரேசன், காவலர்கள் சங்கர் குமார் மற்றும் முருகன் ஆகியோர் இவர்களை கண்டனர். இதையடுத்து விரைந்து சென்று இருவரையும் கடலில் இருந்து கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர், நடந்த விபரத்தை கேட்டறிந்து காவல் ஆய்வாளர் அருள் செல்வத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சகோதரிகள் இருவரும் மெரினா காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டனர்.
இதனிடையே மகள்களை காணாமல் பல்வேறு இடங்களில் பெற்றோர் தேடியுள்ளனர். இந்த நிலையில்தான், அவர்கள் காவல் நிலையத்தில் இருக்கும் தகவல் தெரிந்து அங்கு சென்றனர். மகள்களை பார்த்து கண்ணீர் வடித்தனர். பின்னர் தங்களுடன் அழைத்துச் செல்ல தயாராகினர். ஆனால் மகள்களோ, "நீங்கள் தினமும் சண்டையிடுவதால் உங்களுடன் வர விரும்பவில்லை" என உறுதிபட தெரிவித்தனர். இதையடுத்து, அவர்களின் உறவினர் ஒருவரை வரவழைத்த போலீஸார் இருவரையும் அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.
குழந்தைகளின் நலன் கருதாமல் சதா சண்டையிடுவதால் பிள்ளைகளின் மனநிலை பாதிக்கப்படும். அதன் உச்சமாகத்தான் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சென்றுள்ளனர். எனவே, இதுபோன்ற செயலில் ஈடுபடாமல் எந்த கருத்து வேறுபாடு வந்தாலும் குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு விட்டுக்கொடுத்து நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கி பெற்றோரை போலீஸார் அனுப்பி வைத்தனர்.
தற்கொலை தீர்வாகாது: தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு தருவதில்லை. இதுபோன்ற எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000, மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 மற்றும் ஐகால் உதவி எண்: 022-25521111 எண்களில் தொடர்பு கொள்ளுமாறு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...