Published : 01 Apr 2025 05:19 AM
Last Updated : 01 Apr 2025 05:19 AM
ஊட்டி / கொடைக்கானல்: உயர் நீதின்ற உத்தரவின்படி நீலகிரி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு செல்ல புதிய வாகனக் கட்டுப்பாடு இன்றுமுதல் அமலுக்கு வருகிறது. நிர்ணயிக்கப்பட்ட வாகன எண்ணிக்கை அடிப்படையில் ‘இ-பாஸ்’ வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச சுற்றுலா தலங்களாக விளங்கும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் திண்டுக்கல்மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் கோடை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகின்றனர். இதனால் ஏற்படும் நெருக்கடியை தவிர்க்க, சென்னை உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது.
அதன்படி, கடந்த ஆண்டு மே 7 முதல் நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 1 முதல் ஜூன் இறுதி வரை, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை, நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்கள், சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் 8 ஆயிரம் சுற்றுலா வாகனங்கள் மட்டுமே நீலகிரி மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் மேலும் ஒரு கட்டுப்பாட்டை கடந்த மாதம் விதித்தது.
இதன்படி ஏப்ரல் 1-ம் தேதியான இன்று, நள்ளிரவு 12 மணி முதல் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளது. ஒவ்வொரு நாளும் முதலில் விண்ணப்பிக்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படும். ஆனால் நீலகிரி மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்கள், ஆம்புலன்ஸ், சரக்கு வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை.
இதையடுத்து, மாவட்ட எல்லைகள் உள்ள கல்லாறு, குஞ்சப்பனை, முள்ளி, கக்கநல்லா, பாட்டவயல், சேரம்பாடி, நாடுகாணி உள்ளிட்ட 14 சோதனைச் சாவடிகளில் இ-பாஸை தீவிரமாக சோதனை செய்து வாகனங்களை அனுமதிக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. https://epass.tnega.org/home என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து நீலகிரிக்குள் வரலாம் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று கொடைக்கானலுக்குள், வார நாட்களில் 4,000 வாகனங்கள், வார இறுதி நாட்களில் 6,000 வாகனங்களை மட்டுமே அனுமதிக்கும் வகையில், இன்று முதல் ஜூன் 30-ம் தேதி வரை கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது. இந்த வாகன எண்ணிக்கை அடிப்படையில் இ-பாஸ் வழங்கும் வகையில் இணையதளத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு நாளில் 4,000 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டு விட்டால், அதற்கு மேல் விண்ணப்பிப்போருக்கு வேறொரு நாளை தேர்வு செய்யும்படி அறிவிப்பு வருகிறது.
ஐஐடி, ஐஐஎம் குழு வருகை: ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களில் எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிப்பது என்பது குறித்து சென்னை ஐஐடி, பெங்களூரு ஐஐஎம் சார்பில் ஆய்வு மேற்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஐஐடி, ஐஐஎம் குழுவினர் ஓரிரு நாட்களில் கொடைக்கானல் வர உள்ளனர். அவர்கள் கொடைக்கானலில் சில நாட்கள் தங்கியிருந்து வாகனக் கட்டுப்பாடு, போக்குவரத்து நெரிசலுக்கான தீர்வு குறித்து பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment