Published : 31 Mar 2025 08:42 PM
Last Updated : 31 Mar 2025 08:42 PM
சென்னை: திருப்பூர் மாவட்டத்தில் தனியார் அறக்கட்டளைக்கு தானமாக வழங்கப்பட்ட 4 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் தவறுதலாக வேறு நபர்களின் பெயர்களுக்கு பட்டா வழங்கி விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக டிஆர்ஓ விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகேயுள்ள குடிமங்கலத்தில் தர்ம தண்ணீர் பந்தல் அறக்கட்டளைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை 1917-ல் சுப்பா நாயக்கர் என்பவர் தானமாக வழங்கினார்.கோடிக்கணக்கான மதிப்புள்ள இந்த நிலத்தை வேறு நபர்களின் பெயர்களுக்கு அதிகாரிகள் முறைகேடாக பட்டா வழங்கியுள்ளதாகவும், அந்த நிலத்தை தற்போது சிலர் ஆக்கிரமித்துள்ளதாகவும் கூறி சுப்பா நாயக்கரின் சட்டப்பூர்வ வாரிசுதாரர்களில் ஒருவரான கே.சவுந்தரராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி, அதிகாரிகள் தவறுதலாக வேறு நபர்களின் பெயர்களுக்கு பட்டா வழங்கியிருப்பது தொடர்பாக விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். ஆனால், அந்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை எனக் கூறி கே.சவுந்தரராஜன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர், கே.ஜி.திலகவதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.கங்காதரன் ஆஜராகி வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்கறிஞர் டி.கே.சரவணன், “பட்டா, நில அளவை ஆகியவற்றை புதுப்பிக்கும் பணி நடைபெற்ற போது அதிகாரிகளின் தவறுதலால் பட்டா வேறு நபர்களின் பெயர்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. வருவாய் துறை கடந்த 2004 ஆக.17 அன்று பிறப்பித்த அரசாணைப்படி தவறுதலாக வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பட்டா வழங்கப்படும்”, என்றார்.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “இந்த வழக்கில் திருப்பூர் டிஆர்ஓ-வையும் எதிர்மனுதாரராக தாமாக முன்வந்து சேர்க்கிறோம். அவர் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்கள் என இரு தரப்பிடமும் விசாரணை நடத்தி, யாருக்கு அந்த நிலம் சொந்தம் என்பதைக் கண்டறிந்து, வேறு நபர்களின் பெயர்களுக்கு பட்டா வழங்கப்பட்டு இருந்தால் அதை ரத்து செய்து, சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களுக்கு பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment