Published : 31 Mar 2025 04:50 PM
Last Updated : 31 Mar 2025 04:50 PM
திருப்பத்தூர்: “தமிழகத்தில் தொடரும் குற்றச் சம்பவங்களை முழுமையாகத் தடுக்க உளவுத் துறையை வலுப்படுத்த வேண்டும்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
திருப்பத்துார் மாவட்டம், கந்திலி அடுத்த கெஜல்நாயக்கன்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நுாற்றாண்டு விழா மற்றும் படத்திறப்பு விழா இன்று (மார்ச் 31) நடைபெற்றது. கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “தமிழகத்தை வஞ்சிக்க வேண்டும் என்று உணர்வோடு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. 100 நாள் வேலைத் திட்டத்தில் நிதி வழங்காமல் தமிழகத்தை பாஜக அரசு வஞ்சிக்கிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.
இயற்கை சீற்றத்தால் விவசாயம், விவசாய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகள் சேதமடைந்தது, கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இதற்கு மத்திய அரசிடம் தமிழக அரசு ரூ.37 ஆயிரம் கோடி நிதி கேட்டது. ஆனால் இதுவரை ஒரு பைசா கூட மத்திய அரசு வழங்கவில்லை. மக்களின் வரிப்பணத்தை தனியாரிடம் கொடுத்துவிட்டு மக்களுக்கு எதிராக செயல்படுவது எந்த வகையில் நியாயம் ? கொள்கை ரீதியாக அதிமுகவும், பாஜகவும் ஒன்று சேர முடியாது. மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை என்றால் எதற்காக நிர்பந்தம் செய்ய வேண்டும்?
கோடநாடு வழக்கு நடந்து வருகிறது. இரட்டை இலை இருக்குமா, இருக்காதா, அதற்கு மேலாக அதிமுகவில் பொதுச் செயலாளராக பழனிசாமி தொடர முடியுமா, முடியாதா... இதையெல்லாம் சரி செய்து கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமியை பாஜக மிரட்டி அடிபணிய வைத்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தில் தொடரும் குற்றச் சம்பவங்களை முழுமையாக தடுக்க உளவுத் துறையை வலுப்படுத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்டத் துணைச் செயலாளர் நந்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுந்தரேசன், நிர்வாகக் குழு உறுப்பினர் சாமிக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, ஒன்றியச் செயலாளர் அண்ணாமலை வரவேற்றார். கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment