Published : 31 Mar 2025 04:47 PM
Last Updated : 31 Mar 2025 04:47 PM
சென்னை: ‘எம்புரான்’ திரைப்படத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்து அவதூறான கருத்து தெரிவிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க வேண்டும். தொடர்ந்து அறிவார்ந்த தமிழ்ச் சமூகத்தை கொச்சைப்படுத்தி வரும் போக்கை மலையாள திரையுலகம் கைவிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாகர்கோவில், தென்காசி, கம்பம், போடி, பொள்ளாச்சி, கோவை என தெற்கில் இருந்து வடக்கு வரை கணிசமாக தமிழ் நிலத்துடன் தொழில், சுற்றுலா ரீதியில் கேரள மாநிலம் தொடர்பில் இருக்கிறது. இந்த எல்லைப் பகுதிகளில் இரு மாநில மக்களுக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது. உயர் கல்விக்காகவும், வேலைக்காகவும், மலையாளிகள் இடம் பெயரும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இப்படி சகோதரத்துடன் தமிழர்களும், கணிசமான மலையாளிகளும் இருந்து வரும் நிலையில், மலையாள திரைப்படங்களில் தொடர்ந்து தமிழர்களை கொச்சைப்படுத்தி வருவது என்பது கடும் கண்டனத்துக்குரியது.
மலையாள இயக்குநர்கள், நடிகர்கள், துணை நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பலரும், சென்னையில் திரைப்பட தொழிலை கற்றுக் கொண்டு, அவர்களின் சொந்த மாநிலத்துக்கு வண்டி ஏறும்போது, கூடவே தமிழின வெறுப்பையும் சுமந்துக் கொண்டே செல்கின்றனர். இதன் காரணமாகவே, அவர்கள் பணியாற்றக்கூடிய மலையாள திரைப்படங்களில் தமிழின வெறுப்பை உமிழ்ந்து வருகின்றனர்.
மலையாள இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கிய ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ காதல் திரைப்படத்தில், இலங்கை அமைதிப்படையை ஆதரித்தும், ஈழப் போராளிகளை கொச்சைப்படுத்தும் காட்சி சம்மந்தமே இல்லாமல் திணிக்கப்பட்டிருந்தது. தென் தமிழக விவசாயிகளின் சோற்றில் மண்ணை போடும் விதமாக "முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும்" என்கிற பிரச்சாரத்தை வலியுறுத்தி சோஹன் ராய் என்ற மலையாளி ‘டேம் 999’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
தமிழர்களை கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்ட மலையாள இயக்குநர் சந்தோஷ் சிவன் இயக்கிய ’இனம்’, ஈழத்தில் தமிழர்கள் இன அழிப்பை நியாயப்படுத்திய 'மெட்ராஸ் கபே' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் சான்றாக இருக்கிறது. இந்தத் திரைப்படங்களின் வரிசையில், கேரளாவின் பிரபல நடிகர் மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘எம்புரான்’ திரைப்படத்தில், முல்லைப் பெரியாறு அணை குறித்து அவதூறான கருத்து தெரிவிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பெற்றிருக்கிறது.
இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் நடிகர் பிருதிவிராஜ், படத்துக்கும் அதன் போக்கிற்கும் தொடர்பே இல்லாமல், முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக வன்மத்தை காட்டியிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.
குறிப்பாக, நெடும்பள்ளி டேம் என்று மாற்று பெயரிட்டு, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குள் அடங்கி இருந்த திருவிதாங்கூர் ராஜா, 999 வருடங்களுக்கு இனாமாக எழுதிக் கொடுத்தாராம். எழுதி வாங்கிய பிரிட்டிஷ்காரன் போய்விட்டானாம். மன்னராட்சியும் போய் விட்டதாம். ஆனாலும், அந்த ஆபத்து மக்களை காவு வாங்க காத்து நிற்பதாக நடிகை மஞ்சு வாரியர் பேசும் வசனம் தமிழின காழ்ப்புணர்ச்சியின் உச்சம்.
மேலும், இரண்டு ஷட்டரை திறந்தாலே, மக்கள பலிவாங்குற அணையை, அதாவது முல்லைப் பெரியாறு அணையை, குண்டு வைத்து தகர்த்தால், கேரளம் மறுபடியும் தண்ணீருக்குள் மூழ்கும். அணையை காப்பாற்ற செக் டேம் எனும் சுவர்களால் பயனில்லை. அணையே இல்லாமல் இருந்தால் தான் சரி என்பன போன்ற வசனங்களும் படத்தில் இடம்பெறுகின்றன.
தமிழின வெறுப்பை உமிழும் இதுபோன்ற திரைப்படங்கள், தமிழ்நாடு, கேரள மாநில மக்களிடையே நீடித்து வரும் நல்லுறவை சீர்குழைத்து, இருமாநில உறவை கெடுக்கும்.
எனவே, ‘எம்புரான்’ திரைப்படத்தில், முல்லைப் பெரியாறு அணை குறித்து அவதூறான கருத்து தெரிவிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க வேண்டும். தொடர்ந்து அறிவார்ந்த தமிழ்ச் சமூகத்தை கொச்சைப்படுத்தி வரும் போக்கை மலையாள திரையுலகம் கைவிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment