Published : 19 Jul 2018 02:13 PM
Last Updated : 19 Jul 2018 02:13 PM

பிரபலமாகும் கொடைக்கானல் மலையேற்ற பைக் சவாரி சுற்றுலா: ஆன்லைன் புக்கிங் மூலம் பைக்குகளை வாடகைக்கு விடும் நிறுவனம்

மதுரை அருகே கொடைரோட்டில் இருந்து கொடைக்கானலுக்கு வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மலையேற்ற பைக் சவாரி சுற்றுலா செல்வதற்கு இருசக்கர வாகனங்களை ஆன்லைன் புக்கிங் மூலம் வாடகைக்குவிடும் நிறுவனத்தை இளைஞர்கள் இருவர் தொடங்கியுள்ளனர்.

விடுமுறைக் காலங்களில் பரபரப்பான இயந்திர வாழ்க்கையில் இருந்து ஒதுங்கி பரிட்சயமில்லாத மலைப் பிரதேசங்களுக்குச் சுற்றுலா செல்வது தற்போது எல்லோருக்கும் பிடித்தமான பொழுதுபோக்கு அம்சமாகி விட்டது. கார்களில், பஸ்களில் இந்த இடங்களுக்கு சென்ற காலம் மலையேறிப்போய், தற்போது மனதுக்கு பிடித்தமான இருசக்கர வாகனங்களில் பைக் சவாரி சுற்றுலா செல்வது இளைஞர்களுக்கு பெரும் விருப்பமாக உள்ளது.

இந்தப் பயணத்தில் புதுப்புது இடங்களை நினைத்தவுடன் நின்று ரசிப்பது, புகைப்படங்கள் எடுப்பது மனதுக்கு புது உற்சாகத்தையும், நிறைய அனுபவங்களையும், ஆச்சரியங்களையும் தருகிறது. முன்பெல்லாம் மலையேற்ற பைக் சவாரி சுற்றுலாவுக்கு வட மாநிலங்களையும், வெளிநாடுகளையும் சேர்ந்த இளைஞர்கள் தேடிச் சென்றனர். தற்போது அவர்கள் அதிகளவு கொடைக்கானல் வர ஆரம்பித்துள்ளனர்.

மதுரை அருகே கொடைரோட்டில் இருந்து கொடைக்கானலுக்கு தினமும் வட மாநில இளைஞர்கள், வெளிநாட்டினர் அணி அணியாக பைக் சவாரி செல்வது அதிகரித்துள்ளது. பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட வெளியிடங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு பைக் சவாரிக்கு ஏற்ற இரு சக்கர வாகனங்கள் கிடைப்பது சிரமமாக இருந்தது.

அவர்களுக்கு வசதியாக தற்போது மதுரைக்கு அருகில் கொடைரோட்டில் மலையேற்ற பைக் சவாரிக்கு ஏற்ற இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனத்தை பிரபு, சங்கர் லால் என்பவர்கள் தொடங்கியுள்ளனர்.

அவர்கள் கூறுகையில், ‘‘கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் தொடங்கினோம். தினசரி ரூ.1,800 அடிப்படையில் வாடகைக்கு விடுகிறோம். பைக் ரைடு செல்வதற்கு எங்களுடைய ஆன்லைன் வெப்சைட்டில் (www.rento.bike) ஆன்லைன் புக்கிங் செய்ய வேண்டும். வண்டியை எடுத்துச் செல்லும்போது பைக் ரைடர் தங்களுடைய ஒரிஜினல் அடையாள அட்டையையும், டெபாசிட் தொகை ரூ.5 ஆயிரமும் கொடுக்க வேண்டும். ஆன்லனில் புக்கிங் செய்யும்போது எந்த பைக் என்பதையும் புக்கிங் செய்ய வேண்டும்.

ராயல் என்பீல்டு பைக்குகளில் மலையேற்ற பைக் சவாரி செல்வதில் இளைஞர்களுக்கு தனி ஈர்ப்பு இருக்கும். இந்த பைக் சவாரி டிரெண்டாலே தற்போது ராயல் என்பீல்டு பைக்குகள் மறுபடியும் வந்துள்ளன. நாங்களே பைக் சவாரி செல்வோருக்கு ஹெல்மெட் கொடுத்து விடுவோம். உடன் செல்வோருக்கும் கொடுக்கிறோம். ஒரு நாளைக்கு கொடைரோடு-கொடைக்கானல் சென்று வர 200 கி.மீ., அனுமதி உண்டு. 24 மணி நேரத்திற்கு ரூ.1,600 வாடகை வாங்குகிறோம்.

பைக்குகளில் குறிப்பிட்ட வேகம் மட்டுமே செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு விதித்துள்ளோம். பைக்குகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி அனுப்புவதால் அவர்கள் அந்த வேகத்தைத் தாண்டும்போது எங்களுக்கு அலர்ட் மெசேஜ் வரும். எந்த திசையில் எந்த சாலையில் பயணிக்கிறார்கள் என்பதைக் கண்காணிப்போம். ஹெல்மெட் இல்லாமல் ஓட்ட விடமாட்டோம். கொடைக்கானல் மலையை விட்டு வேறு எங்கும் போகக் கூடாது. 200 கி.மீ., மேலே ஓட்டினால் கி.மீ., விகிதம் கட்டணம் வசூலிக்கப்படும்.

 

விதிமுறைகளை மீறும் போது வரும் ஒவ்வொரு அலர்ட் மெசேஜ்-க்கும் அபராதம் வசூலிக்கப்படும். அந்த தொகை அவர்களுடைய டெபாசிட் தொகையில் இருந்து பெறப்படும். ராயல் என்பீல்டு பைக்குகளில் ஹிமாலயன், தண்டர்பேர்ட் வகை பைக்குகளை தற்போது வாடகைக்கு விட்டுள்ளோம். அவை 350 சிசி, 500 சிசி பவர் கொண்ட பைக்குகள். அதுபோக சில கிளாசிக் பைக்குகளும் உள்ளன. பெண்கள் விரும்பினால் மலையேற்ற பைக் சவாரிக்கு 125 ஹோண்டா ஆக்டிவா பைக்குகளையும் கொடுக்கிறோம்” என்று பிரபுவும், சங்கர் லாலும் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x