Published : 31 Mar 2025 06:14 AM
Last Updated : 31 Mar 2025 06:14 AM
சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல்களை உடனடியாக நடத்தக்கோரி தன்னாட்சி அமைப்புகளின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கிராமங்களுக்கு வளர்ச்சியை கொண்டு வரவும், ஊராட்சிகளின் பணிகள் தொடரவும், ஏழை, எளிய கிராம மக்களுக்கு திட்டங்கள் முறையாக கிடைக்கவும், மக்கள் பங்கேற்புடன் கிராம சபைகள் முறையாக நடக்கவும் தமிழகத்தில் 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி, தன்னாட்சி, அறப்போர், மக்களின் குரல் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் சென்னை எழும்பூரில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டம் குறித்து தன்னாட்சி மக்கள் இயக்கத்தின் துணை தலைவர் நந்தகுமார் சிவா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 2019-ம் ஆண்டில் தேர்தல் நடந்த 28 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை 2025 ஜனவரி 5-ம் தேதிக்குள் மாநில தேர்தல் ஆணையம் நடத்தி முடித்திருக்க வேண்டும்.
ஆனால் இதுவரை அதற்கான எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை. இதனால் 9,624 கிராம ஊராட்சி தலைவர்கள், 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 5,090 ஒன்றிய கவுன்சிலர்கள், 515 மாவட்ட கவுன்சிலர்கள் பொறுப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருக்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் கையில் இருக்கவேண்டிய கிராம நிர்வாகம், தற்போது தனி அலுவலர்கள் கையில் கொடுக்கப்பட்டுள்ளது. நகரமயமாக்கலை காரணம் காட்டி ஊரக உள்ளாட்சி தேர்தல்களை தள்ளிபோடுவது ஏற்புடையதல்ல.
உரிய காலத்தில் முறையான தேர்தல் என்பது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையாகும். எனவே ஊரக உள்ளாட்சி தேர்தல்களை தள்ளிப்போடாமல் விரைந்து நடத்த மாநில தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் முன்வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment