Published : 31 Mar 2025 06:11 AM
Last Updated : 31 Mar 2025 06:11 AM
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் மத்திய சென்னை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், அண்ணாநகர் மண்டலம் திருநகரில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட இறகு பந்து உள் விளையாட்டரங்கை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தயாநிதிமாறன் எம்.பி. ஆகியோர் நேற்று திறந்துவைத்தனர்.
சென்னை மாகநராட்சி அண்ணாநகர் மண்டலத்தில் 95-வது வார்டு, வில்லிவாக்கம், புதிய ஆவடி சாலை, திருநகர் பகுதியில் மத்திய சென்னை எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.50 லட்சத்தில் புதிய இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை தொகுதி எம்.பி. தயாநிதிமாறன் ஆகியோர் பங்கேற்று இறகு பந்து உள் விளையாட்டரங்கத்தை திறந்து வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, மத்திய சென்னை எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் சென்னைக் குடிநீர் வாரிய பயன்பாட்டுக்காக அண்ணாநகர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீரை வெளியேற்றும் பணிகளை மேற்கொள்ளும் ஜெட்ராடிங் இயந்திரம் பொருத்தப்பட்ட வாகனத்தின் சேவையை இருவரும் தொடங்கிவைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, வில்லிவாக்கம் தொகுதி எம்எல்ஏ அ.வெற்றியழகன், மண்டலக் குழுத் தலைவர் கூ.பி.ஜெயின், மாநகராட்சி கவுன்சிலர்கள் சுதா தீனதயாளன், டி.வி.செம்மொழி, லதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment