Published : 31 Mar 2025 12:30 AM
Last Updated : 31 Mar 2025 12:30 AM
ஊரக வளர்ச்சி அலுவலர் சங்க நிர்வாகிகளை அவமதித்த பெரம்பலூர் ஆட்சியரைக் கண்டித்து ஏப். 1,2,8-ம் தேதிகளில் தொடர் போராட்டம் நடைபெறவுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ச.ராமமூர்த்தி, பொதுச் செயலாளர் பா.ரவி ஆகியோர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாநில நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.பாஸ்கரன் உள்ளிட்டோர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையீடு அளிப்பதற்காக ஆட்சியர் அலுவலகம் சென்றுள்ளனர்.
அவர்களிடம், அநாகரிகமான வார்த்தைகளைப் பிரயோகித்து ஆட்சியர் கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ் அவமதித்துள்ளார். கோரிக்கை மனுக்களை, கொஞ்சமும் நாகரிகமின்றி மாநில நிர்வாகிகள் முன்னிலையிலேயே கசக்கி குப்பைத் தொட்டியில் வீசி, வெளியே செல்லுமாறு மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.
கண்ணியமிக்க ஆட்சியர் பொறுப்பில் இருப்பவர், கண்ணியத்தை காற்றில் பறக்கவிட்டு செய்த இச்செயலை கொஞ்சமும் எதிர்பார்க்காத மாநில நிர்வாகிகள் தொழிற்சங்க ரீதியாக அவரது செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மீண்டும் ஊழியர்களின் கோரிக்கைகளை அமைதியான முறையில் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால், ஆட்சியர் தனது பொறுப்பின் மாண்புக்கேற்ப தீர்வு காண்பதற்கு பதிலாக, கோரிக்கைகளை அமைதியான முறையில் வலியுறுத்திய மாநில நிர்வாகிகளை காவல் துறை மூலம் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். ஆட்சியரின் தொழிற்சங்க விரோத நடவடிக்கைக்கும், கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை காவல் துறை மனிதாபிமானமற்ற முறையில், சமூக விரோதிகளைப்போல நடத்திய அநாகரிக செயலுக்கும் வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறோம்.
ஜனநாயக விரோதப் போக்கோடும், ஊழியர் விரோதப் போக்கோடும் செயல்பட்ட பெரம்பலூர் ஆட்சியர் மீதும், மாநில நிர்வாகிகளை மனிதாபிமானமற்ற முறையில் நடத்திய பெரம்பலூர் காவல் துறை மீதும் தமிழக அரசு விசாரணை மேற்கொண்டு, விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நடைபெற்ற அநாகரீக செயலுக்கு பெரம்பலூர் ஆட்சியர் வருத்தம் தெரிவிக்கவும், தாமதமின்றி ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் முன்வர வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
இத்தகைய ஊழியர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் ஏப். 1-ம் தேதி நடைபெறவுள்ள வெளிநடப்பு ஆர்ப்பாட்டத்திலும், ஏப். 8-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் கருப்பு பட்டை அணிந்து நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திலும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஏப். 2-ம் தேதி அனைத்து வட்டத் தலைநகரங்களில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திலும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் முழுமையாக பங்கேற்று, கண்டனத்தை பதிவு செய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...