Published : 05 Aug 2014 11:05 AM
Last Updated : 05 Aug 2014 11:05 AM

கொள்ளிடம் ஆற்றில் ரூ.400 கோடியில் கதவணை: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

கொள்ளிடம் ஆற்றில் ரூ.400 கோடியில் கதவணை கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதுகுறித்து சட்டப்பேரவை யில் விதி 110-ன் கீழ் திங்கள் கிழமை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:

காவிரியின் பிரதான வெள்ள நீர் போக்கியாக திகழும் கொள்ளிடம் ஆற்றில் கீழணை தவிர, எந்த ஒரு பாசன கட்டுமானமும் இல்லாததால், மழைக்காலத்தில் கடலில் நீர் வீணாகக் கலக்கிறது. இதைத் தடுக்கும் வகையில் ஆதனூர் - குமாரமங்கலம் கிராமங்களுக்கிடையே 0.6 டிஎம்சி அளவு கொண்ட கதவணை ரூ.400 கோடியில் கட்டப்படும்.

திருச்சி மாவட்டம் பேட்ட வாய்த்தலை உய்யகொண்டான் வாய்க்காலின் தலை மதகில் உள்ள மண் போக்கி, பாலக்கரை பகுதியில் உள்ள உய்யகொண்டான் வாய்க்கால் ஆகியவை ரூ.14 கோடியில் சீரமைக்கப்படும். திருச்சி மாவட்டத்தில் 7 அணை கள் மற்றும் சமுத்திரம், மரவனூர் ஏரிகள் ரூ.16.85 கோடியில் புனரமைக்கப்படும். கொத்த மங்கலம் அணை ரூ.2 கோடியிலும், திருவெறும்பூர், முசிறி மற்றும் துறையூர் வட்டங்களில் உள்ள 3 ஏரிகள் ரூ.2.7 கோடியிலும் புனரமைக்கப்படும்.

17 தடுப்பணைகள்

இது தவிர, மேலணையின் கீழ்புறம் காவிரி ஆற்றின் வலது கரையை பாதுகாக்கும் பணி ரூ.1.2 கோடியில் மேற்கொள்ளப்படும். தேனி மாவட்டத்தில் உள்ள 18ம் கால்வாய் உத்தமபாளையம் வட்டம் ரெங்கனாதபுரம் கிராமத் தில் உள்ள சுத்த கங்கை ஓடையிலிருந்து கூவலிங்க ஆறு வரை நீட்டித்து, கோட்டக்குடி ஆறுடன் ரூ.48 கோடி செலவில் இணைக்கப்படும். திருச்சி மாவட்டத்தில் ரூ.32.3 கோடியில் புதியதாக 17 தடுப்பணைகள் கட்டப்படும்.

தேனி மாவட்டத்தில் தென்கரை புது அணை, ஒட்டணை, குட முருட்டி அணை, பிரம்பு அணை, முக்காவூர் பிரிவணை மற்றும் கெங்குவார்பட்டி வைரவன் அணைக்கட்டின் வழங்கு வாய்க் கால் ஆகியவை ரூ.7.85 கோடியிலும், போடிநாயக்கனூர் வட்டம் சிலமலை உள்ளிட்ட 12 அணைகள் ரூ.3.32 கோடியிலும், ஆண்டிப்பட்டி வட்டம் குன்னூர் வரத்துக் கால்வாய் ரூ.8.33 கோடியிலும் புனரமைக்கப்படும். தாமரைக்குளம் வரத்து கால்வாய் மற்றும் அதன் கண்மாய் ரூ.2.5 கோடியில் நவீனப்படுத்தப்படும்.

வாய்க்கால் தூர்வாருதல்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் வடகாடு அருகே உள்ள பரப்பலாறு அணையின் நீர் பரப்புப் பகுதியில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் அசல் கொள்ளளவான 200 மில்லியன் கன அடிக்கு கொண்டுவரும் திட்டம் ரூ.20 கோடியில் செயல்படுத் தப்படும். நரசிங்கபுரம் ராஜா வாய்க்கால் ரூ.11 கோடியில் தூர்வாரப்படும்.

பவானி ஆற்றின் குறுக்கே மிகப் பழமையான கொடிவேரி அணைக்கட்டில் இருந்து பிரியும் தடப்பள்ளி மற்றும் அரக்கன் கோட்டை கால்வாய்களின் செயல் திறனை அதிகப்படுத்தும் வகை யில், முதல்கட்டமாக தலைமதகு பகுதியில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்பூச்சு மற்றும் புனரமைக்கும் பணிகள் நடப்பாண்டில் தொடங்கப்படும்.

முல்லை பெரியாறு அணை

முல்லை பெரியாறு பிரதான கால்வாய் 68,334 ஹெக்டேர் நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கிறது. எனது அரசின் விவேகத்துடன் கூடிய சீரிய முயற்சியால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம், தற்காலிகமாக குறைக்கப்பட்ட 136 அடியிலிருந்து முதல்கட்டமாக 142 அடி வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கூடுதல் நீரை உரிய வகையில் பயன்படுத்த பெரியாறு பிரதான கால்வாயின் கிளைக் கால்வாய்களை புனரமைப்பு செய்வது மிக அவசியமாகிறது.

முதல்கட்டமாக மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 1, 2, 3, 4 மற்றும் 12-வது பிரிவு வாய்க்கால்கள், பெரியார் நீட்டிப்பு கால்வாய் ஆகியவற்றில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்பூச்சு மற்றும் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஆந்திரத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டிக்கு கிருஷ்ணா நதி நீரைக் கொண்டு வரும் 177.10 கி.மீ. கண்டலேறு கால்வாயின் கரைகள் ரூ.20 கோடியில் பலப்படுத்தப்படும்.

மொத்தத்தில் ரூ.670.5 கோடியிலான இத்திட்டங்கள் மூலம் ஆயக்கட்டு நிலைப்படுத் தப்பட்டு, கூடுதல் பாசன வசதி ஏற்படுத்தப்படுவதால் வேளாண் உற்பத்தி அதிகரித்து, விவசாய பெருங்குடி மக்கள் வாழ்வு சிறக்க வழி வகுக்கும். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x