Last Updated : 30 Mar, 2025 03:21 PM

6  

Published : 30 Mar 2025 03:21 PM
Last Updated : 30 Mar 2025 03:21 PM

கட்டியதற்கு ரூ.8 கோடி... சீரமைக்க ரூ.18 கோடி - காஞ்சி தடுப்பணை ‘8 ஆண்டு’ சர்ச்சை

கஞ்சிபுரம் மாவட்டம் வெங்கச்சேரி பகுதியில் செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப் பணையை சீரமைக்க ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ரூ.8 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணையை சீரமைக்க 8 ஆண்டுகளுக்குள் 2 மடங்குக்கும் அதிகமாக நிதி ஒதுக்கும் அளவுக்கு தடுப்பணையில் என்ன நடந்துள்ளது என்பது விவசாயிகள் மத்தியில் விவாதப் பொருளாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு மற்றும் செய்யாற்று பகுதிகளில் அதிக அளவில் தடுப்பணை களை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் தொடர் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். அதன்படி ஆங்காங்கே ஒருசில இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன. மழைக் காலங்களில் இந்த தடுப்பணைகளில் நீர் தேங்கி நின்று நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், விவசாயத்துக்கும் பெரும் உதவியாக இருந்து வருகிறது.

இதேபோல் கடந்த 2017-ம் ஆண்டு செய்யாற்றின் குறுக்கே மாகரல் - வெங்கச்சேரி பகுதியில் ரூ.8 கோடியில் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த அணையில் இருந்து ஒரு பகுதி நீர் வெளியேற்றப்பட்டு காவாந்தண்டலம் ஏரிக்குச் செல்லும் வகையில் கால்வாயும் உள்ளது. இதன்மூலம் 30 -க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வந்தன. இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு பெய்த கனமழையில் அணைக்கட்டின் அடிப்பகுதி சேதமைடந்தது. காவாந்தண்டலம் ஏரிக்குச் செல்லும் கால்வாயும் சரி இல்லாமல் போனதால் ஏரிக்கு முறைப்படி தண்ணீரும் செல்லவில்லை.

இந்நிலையில் சேதமடைந்த அணைக்கட்டை சீரமைக்கவும், கால்வாயை சரி செய்யவும் ரூ.18 கோடி நிதியுதவி கேட்டு நீர்வளத்துறை அதிகாரிகள் கோப்புகளை அனுப்பினர். இதற்கான நிதி ஒதுக்குவதற்கான அறிவிப்பு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பணையை கட்டுவதற்கே ரூ.8 கோடிதான் செலவு ஆன நிலையில், அதனை சீரமைக்க ரூ.18 கோடி ஒதுக்கப்பட்ட சம்பவம் விவசாயிகள் மத்தியில் விவாதப் பொருளாகியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விசாயிகள் இயக்கத்தின் தலைவர் அருங்குன்றம் தேவராஜன் கூறியதாவது: கல்லணை போன்றவை ஆயிரம் ஆண்டுக ளாக ஆற்றில் நிற்கின்றன. இவர்கள் கட்டும் தடுப் பணை 4 ஆண்டுகளிலேயே சேதமடைகிறது. ஆற்றில் வெள்ளம் வரத்தான் செய்யும். ஆற்றில் அமைக்கப்படும் தடுப்பணைகள் வெள்ளத்தை தாங்கும் வகையில்தானே அமைக்கப்பட வேண்டும். வெள்ளத்தில் தடுப்பணை சேதமடைந்து விட்டது என்று சொல்வது எந்த வகையில் சரியானது. தற்போது ரூ.8 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணையை சீரமைக்க ரூ.18 கோடி நிதி ஒதுக்கி யுள்ளனர்.

ஏறக்குறைய 8 ஆண்டுகளுக்குள் தடுப்பணை கட்டிய செலவைவிட இரு மடங்குக்கும் அதிக மாக நிதி ஒதுக்கியுள்ளனர். சீரமைக்கப்படும் தடுப் பணையாவது வெள்ளத்தை தாங்கி நிற்கும் வகை யில் பலமானதாக இருக்க வேண்டும். இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் நடைபெறும் போது அதிகாரிகள் முறையாக கண்காணிக்க வேண்டும் என்றார்.

அதிகாரிகள் விளக்கம்: செய்யாற்றில் ரூ.8 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணையை சீரமைக்க ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'செய்யாற்றில் வந்த வெள்ளத்தில் தடுப்பணை அருகே பள்ளம் அதிகமாகிவிட்டது. சுமார் 10 மீட்டர் ஆழத்துக்கு அணை அருகே தடுப்புச் சுவர் எழுப்ப வேண்டியுள்ளது. மேலும் இந்த அணை ஏற்கெனவே இருந்த தடுப்பணைபோல் நேரடியாக தண்ணீர் ஆற்றில் விழாமல் இரண்டு மூன்று அடுக்குகளில் வந்து விழும் வகையில் மாற்று வடிவில் அமைக்கப்பட உள்ளது.

அந்த தடுப்பணை பலமானதாக இருக்க வேண்டும், காவாதண்டலம் ஏரிக்குச் செல்லும் கால்வாயையும் தூர்வார வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ரூ.18 கோடி நிதி கோரி கோப்புகளை அனுப்பினோம். அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு சட்டப் பேரவையில் அறிவிக்கப் பட்டுள்ளது. முறைப் படி அரசாணை வெளியிடப்பட்ட பின்னர் ஒப்பந்தப் புள்ளிகள் கோரும் நடவடிக்கைகள் தொடங்கும். சீரமைக்கப்படும் தடுப்பணை பலமானதாக இருக்கும்' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x
News Hub
Icon