Published : 30 Mar 2025 12:20 PM
Last Updated : 30 Mar 2025 12:20 PM
தமிழ்நாட்டில் காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கான ஒதுக்கீடு மூலம் பணியில் சேர்ந்த காவல் ஆய்வாளர்கள் 15 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் காத்திருக்கின்றனர்.
சீருடை பணியாளர் வாரியம் மூலம் 1998-ம் ஆண்டு காவல் துறையில் உதவி ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 5 ஆண்டுகள் காவல் துறையில் பணி முடித்தவர்களுக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும். அந்த ஒதுக்கீட்டில் 148 பேர் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தனர்.
இவர்கள் அனைவரும் 2010-ம் ஆண்டு காவல் ஆய்வாளராகவும் பதவி உயர்வு பெற்றனர். இதனைத் தொடர்ந்து 8 ஆண்டுகளில் துணை காவல் கண்காணிப்பாளராக இவர்கள் பதவி உயர்வு பெற வேண்டும். ஆனால் இவர்களுக்கு இதுவரை பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
இது குறித்து பாதிக்கப்பட்ட நபர்களில் ஒருவரான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் கமலக் கண்ணனிடம் கேட்டபோது, “1998-ம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு தேர்வு நடைபெற்றது. அதில் பாதி பேர் அதே ஆண்டும், மீதமுள்ளவர்கள் 1999-ம் ஆண்டும் பணியில் சேர்க்கப்பட்டனர். துணை கண்காணிப்பாளர் பதவிக்கு பதவி உயர்வு அளிக்கும் போது 1999-ம் ஆண்டு பணியில் சேர்ந்த நாங்கள் 1998-ம் ஆண்டே தேர்வு பெற்றுவிட்டோம். எங்களை அரசுதான் ஒரு வருடம் தாமதமாக பணியில் சேர்த்தது. எங்களை 1998-ம் ஆண்டு பணியில் சேர்த்ததாக பணி மூப்பு கணக்கிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இதனால் பதவி உயர்வு அளிப்பது நிறுத்தப் பட்டுள்ளது.
காவல் துறையில் பணி செய்பவர்களுக்கான ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களுக்கும் இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் எங்கள் பதவி உயர்வையும் சேர்த்து நிறுத்தி வைத்துவிட்டனர். இதனால் 2018-ம் ஆண்டு துணை கண்காணிப் பாளராக பதவி உயர்வு பெற வேண்டிய நான் பதவி உயர்வு பெறாமலேயே ஓய்வு பெற்றுவிட்டேன். என்னை போல் 102 பேர் ஓய்வு பெற்றுவிட்டனர். 37 பேர் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர். அவர்களிலும் 9 பேர் இந்த ஆண்டு ஓய்வு பெறுகின்றனர். தற்போது 50 டிஎஸ்பி பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசு இதில் தலையிட்டு இருப்பவர்களுக்கான பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...