Published : 30 Mar 2025 11:56 AM
Last Updated : 30 Mar 2025 11:56 AM
சென்னை: “ஏடிஎம்.மில் பணம் எடுக்க கட்டணம் உயர்த்தப்படுவதால் நூறு நாள் வேலைத் திட்டப் பயனாளிகள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறும் ஏழைகள் ஆகியோருக்கு பாதிப்பு ஏற்படும். இது டிஜிட்டல்மயமாக்கம் அல்ல, இது நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல்.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “அனைவரும் வங்கியில் கணக்கு தொடங்குங்கள் என்று ஒன்றிய அரசு சொன்னது. பிறகு பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவந்து, டிஜிட்டல் இந்தியா என்றார்கள்.
அடுத்து என்ன? டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் பிடித்தார்கள். குறைவான இருப்புத் தொகை என்று சொல்லி அபராதம் விதித்தார்கள். தற்போது, அனுமதிக்கப்பட்ட மாதாந்திர அளவைத் தாண்டி ஏடிஎம்இல் பணம் எடுக்கும் ஒவ்வொருமுறையும் 23 ரூபாய் வரை கட்டணம் பிடிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
இதனால் என்ன ஆகும்? தேவைக்கு மீறி, ஒரேயடியாக மக்கள் தங்கள் பணத்தை எடுக்க வேண்டி வரும். குறிப்பாக ஏழைகளுக்கும் வங்கிச் சேவைகள் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தையே இது சிதைத்துவிடும்.
ஏற்கனவே நிதி விடுவிக்கப்படாமல் தவிக்கும் நூறு நாள் வேலைத் திட்டப் பயனாளிகள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறும் ஏழைகள் ஆகியோர்தான் இதனால் இருப்பதிலேயே அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
இது டிஜிட்டல்மயமாக்கம் அல்ல, இது நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல். ஏழைகள் ஏடிஎம் அட்டையைத் தேய்க்க, பணக்காரர்கள் திளைக்கிறார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மே 1 முதல் அமல்: ஏடிஎம் மையங்களில் கார்டுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனை சேவைகளுக்கான கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர் ஒருவர் தனது சேமிப்புக் கணக்கு உள்ள வங்கி இல்லாமல் மற்றொரு வாங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் அதற்கான கட்டணத்தை 17 ரூபாயில் இருந்து ரூ.19-ஆக ஒன்றிய ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது.
மேலும் இலவச பரிவர்த்தனைக்கான எண்ணிக்கையை கடந்தால் கூடுதலாக ரூ.2 வசூலிக்கப்பட உள்ளது. மே 1 ஆம் தேதி முதல் இந்த கட்டண நிர்ணயம் அமலுக்கு வரவுள்ளது. ஒருவர் தனது சேமிப்பு கணக்கு உள்ள வங்கி ஏடிஎம்மில் மாதந்தோறும் 5 முறை இலவச பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். இந்த இலவச பரிவர்த்தனைக்கு மேல் பணம் எடுக்கும் போது, அதற்கான கட்டணம் 21 ரூபாயில் இருந்து ரூ. 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான், ஏஎடிஎம் கட்டணம் உயர்வு டிஜிட்டல்மயமாக்கம் அல்ல, நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல் எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...