Published : 30 Mar 2025 11:36 AM
Last Updated : 30 Mar 2025 11:36 AM
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி 12-வது முறையாக ஏகனாபுரம் கிராமத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வளத்தூர், நெல்வாய், தண்டலம், மேல்படவூர், நாகப்பட்டு, ஏகனாபுரம், எடையார் பாக்கம், அக்கம்மாபுரம், குணகரம்பாக்கம், சிங்கிலி பாடி, மகாதேவி மங்கலம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4,791 ஏக்கர் பரப்பளவில் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
இந்த அறிவிப்பு வெளியிட்ட நாளிலிருந்து 978 நாளாக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம், பரந்தூர், தண்டலம், நெல்வாய், மேலேறி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் கிராம சபை கூட்டங்களிலும் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றனர். இதுவரை 11 முறை எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்களை நிறைவேற்றினர்.
இந்நிலையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நேற்று ஏகனாபுரம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கிராம மக்கள் திரளாக பங்கேற்று பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய-மாநில அரசுகள் அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தும் ஒரு மனதாக 12-வது முறையாக தீர்மானத்தை நிறைவேற்றினர்.
உலகத் தண்ணீர் தினத்தை கொண்டாடும் இந்த நாளில் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் அதிகம் உள்ள பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயத்தை பாதிக்கும் வகையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க கூடாது எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment