Published : 30 Mar 2025 07:25 AM
Last Updated : 30 Mar 2025 07:25 AM
சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட (100 நாள் வேலை திட்டம்) நிதியை வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்றார்.
திருப்பூர் மாவட்டம் தாசநாயக்கன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன். விழுப்புரம் மாவட்டம் அருணா புரம் கிராமத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் க.பொன்முடி, கடலூர் மாவட்டம் மோவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் எம்ஆர் கே.பன்னீர்செல்வம் பங்கேற்றுப் பேசினர்.
திண்டுக்கல் பித்தளைபட்டி பிரிவு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் இ.பெரியசாமி, காரைக்குடி அருகே வ.சூரக் குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், விருதுநகர் அருகேயுள்ள செங்குன்றாபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு, பாலவநத்தம் கிராமத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பங்கேற்றுப் பேசினர்.
கோவில்பட்டியில் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அமைச்சர் பெ.கீதாஜீவன் முன்னிலை வகித்தார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் எஸ்.ரகுபதி, அறந்தாங்கி அருகே குரும்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், திருச்சி திருவெறும்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ், அரியலூர் மாவட்டம் செந்துறையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
காந்தியை பிடிக்காதவர்கள்… முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பக்கத்தில், “காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு, அவர் பெயரிலான 100 நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை. கிராமப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது மத்திய பாஜக அரசு. வேண்டப்பட்ட கார்ப்பரேட்களின் பல லட்சம் கோடி கடனை ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்தார்கள். ஆனால், கடும் வெயிலில் வியர்வை சிந்தி உழைத்த ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்கவில்லை. பணமில்லையா அல்லது மனமில்லையா? தமிழகமெங்கும் 1,600 இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவினரும், ஏழை மக்களும் எழுப்பிய குரல் டெல்லியை எட்டட்டும். பாஜக அரசின் மனம் இரங்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...