Published : 30 Mar 2025 07:04 AM
Last Updated : 30 Mar 2025 07:04 AM
சென்னை: உகாதி திருநாளை இன்று கொண்டாடும் தெலுங்கு, கன்னட மக்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழின் உடன்பிறப்பு மொழிகளான தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் புத்தாண்டாகக் கொண்டாடும் உகாதி திருநாள் இன்று மார்ச் 30-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இப்போது மீண்டும் இந்தித் திணிப்பு மூலம் அந்த வளர்ச்சியையும் நமது மொழி அடையாளத்தையும் அழிக்கத் திட்டமிட்ட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வேளையில், தாய்மொழியின் அருமையை உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் உணர்த்த வேண்டும்.
மொழி இருந்தால்தான் இனம் இருக்கும். தெற்கின் மேல் தொடுக்கப்படும் சமூக, அரசியல், பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த அடுத்த தலைமுறையையும் நாம் ஆயத்தப்படுத்த வேண்டும். இதையே எனது உகாதி புத்தாண்டுச் செய்தியாக, கோரிக்கையாக உங்கள் முன்வைக்கிறேன். தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது உகாதி திருநாள் நல்வாழ்த்துகள். நமது மொழி, அரசியல் உரிமைகளைக் காப்பதற்கான ஊக்கத்தை வழங்குவதாக இந்த உகாதி திருநாள் அமையட்டும்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: தமிழ் மக்களோடு ஒன்றி, உறவாடி, உவகையுற வாழ்ந்து வரும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவரும் உகாதி புத்தாண்டில் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்து சாதி, மத பேதம் நீங்கி தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அனைத்து மக்களும் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழர்களுக்கும், தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கும் இடையிலான ஒற்றுமையும், சகோதரத்துவமும் ஆல்போல் தழைத்தோங்க வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு அனைவரும் இணைந்து பாடுபடுவோம் என்று கூறி, உகாதி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாமக தலைவர் அன்புமணி: தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு புதிய நம்பிக்கைகளை உகாதி புத்தாண்டு கொண்டு வருவதோடு, அந்த நம்பிக்கைகளை நிறைவேற்றியும் தர வேண்டும். அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி, சகோதரத்துவம், இன்பம், வளமை, நிம்மதி உள்ளிட்ட அனைத்தும் நிறைய வேண்டும் என்று கூறி வாழ்த்துகிறேன்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழகத்தை தாயகமாக கொண்டு உகாதி தினத்தை கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவரும் அனைத்து செல்வங்களும் பெற்று, நல்ல ஆரோக்கியத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழ வாழ்த்துகிறேன்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: மலரும் இப்புத்தாண்டு தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவரின் வாழ்வில் வளத்தையும், வசந்தத்தையும் வழங்கும் ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன்.
முன்னாள் எம்.பி. சு.திருநாவுக்கரசர்: தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு யுகாதி பண்டிகை வாழ்த்துகளுடன், அவர்கள் வாழ்வில் வளமும் நலமும் பெருக உளமாற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment