Published : 30 Mar 2025 01:10 AM
Last Updated : 30 Mar 2025 01:10 AM

10-ம் வகுப்பு பொது தேர்வுகளில் தமிழை கட்டாயமாக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவுபடுத்தி அடுத்த ஆண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தமிழ் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: உலகிலேயே தமிழகத்தில் மட்டும் தான் தமிழ் மொழியை ஒரு பாடமாக படிக்காமல் பட்டப்படிப்பை நிறைவு செய்ய முடியும் என்ற நிலை நிலவுகிறது. இந்த நிலையை மாற்ற தமிழக பள்ளிகளில் தமிழை கட்டாய பாடமாக்கும் சட்டம் 2006-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின்படி 1-ம் வகுப்பு முதல் தமிழ்க் கட்டாயப் பாடம் நீட்டிக்கப்பட்டு, 2025-26-ல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் கட்டாயப் பாடம் ஆக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை.

தமிழ் கட்டாயப்பாட சட்டத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்திலும், பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்குகளின் காரணமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் கட்டாயப் படமாக்கப்படுவது தாமதமானது. ஆனால், வழக்கை விசாரணைக்கு கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக அரசு கோட்டை விட்டுவிட்டது. ஒரு மாநிலத்தில் அம்மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியை படிக்காமல் பட்டம் பெற முடியும் என்பது அவலமாகும்.

தமிழகத்தில் தமிழ் மொழியை கட்டாயப்பாடமாக்க வேண்டியது அரசின் அடிப்படை கடமையாகும். சட்டம் இயற்றப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன. எனவே, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவுபடுத்தி அடுத்த ஆண்டிலாவது 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தமிழ் கட்டாயப்பாடம் ஆக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT   ( 1 Comments )
  • சின்னப்பன்

    இவர் சொல்கிறமாதிரி ஒவ்வொரு மாநிலத்திலும் அவரவர் மொழியை கட்டாயப் படுத்தினால், இவரது பேரக் குழந்தைகள் ஆந்திரா போனால் தெலுங்கும், கர்நாடகா போனால் கன்னடமும் கட்டாயம் படிக்க வேண்டும்! இவருக்கு ஓகேவா???

 
x