Published : 29 Mar 2025 01:02 PM
Last Updated : 29 Mar 2025 01:02 PM
சென்னை: சட்டம் இயற்றி 20 ஆண்டுகள் நிறைவடைந்தும் 10-ஆம் வகுப்புத் தேர்வில் தமிழ் இன்னும் கட்டாயப்பாடமாக்கப்படவில்லை. தமிழைக் கட்டாயமாக்காமல் பெருமை பேசுவதில் என்ன பயன்? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கான பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நேற்று நடத்தி முடிக்கப்பட்டிருக்கின்றன. வழக்கத்தைப் போலவே நடப்பாண்டிலும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்க் கட்டாயப்பாடமாக்கப்படவில்லை. தமிழக அரசின் அலட்சியம் தான் இதற்கு காரணம் ஆகும்.
உலகிலேயே தமிழகத்தில் மட்டும் தான் தமிழ் மொழியை ஒரு பாடமாக படிக்காமல் பட்டப்படிப்பைக் கூட நிறைவு செய்ய முடியும் என்ற நிலை நிலவுகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவே, பாமக கொடுத்த அழுத்தத்தின் பயனாக தமிழகப் பள்ளிகளில் தமிழை கட்டாயப் பாடமாக்கும் சட்டம் 2006-ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பு முதல் தமிழ்க் கட்டாயப்பாடம் நீட்டிக்கப்பட்டு 2025-26ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் அனைவருக்கும் தமிழ்க் கட்டாயப்பாடம் ஆக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை.
தமிழ்க் கட்டாயப்பாடச் சட்டம் இயல்பாக நடைமுறைக்கு வந்திருந்தால், நடப்பாண்டில் தொடர்ந்து 11-ஆம் ஆண்டாக பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர் தமிழ்ப்பாடத் தேர்வை எழுதியிருப்பார்கள். தமிழை ஒரு பாடமாக தேர்வு செய்யாமல் தமிழ்நாட்டில் எந்த பள்ளியிலும் படிக்க முடியாது என்ற நிலை உருவாகியிருக்கும். அத்தகையதொரு அரிய வாய்ப்பை தமிழகத்தை கடந்த 11 ஆண்டுகளாக ஆட்சி செய்த அரசுகள் தவறவிட்டு விட்டன.
தமிழ்க் கட்டாயப்பாடச் சட்டத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்திலும், பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்குகளின் காரணமாக பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்க் கட்டாயப்படமாக்கப்படுவது தாமதமாகிக் கொண்டே வந்தது.
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைவாக விசாரிக்கப்பட்டால், தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்படுவதற்கும், அதனடிப்படையில் தமிழ்க் கட்டாயப்பாடமாக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் இருந்தன. ஆனால், கடந்த இரு ஆண்டுகளாகவே அந்த வழக்கை விசாரணைக்குக் கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக அரசு கோட்டை விட்டு விட்டது.
ஒரு மாநிலத்தில் அம்மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியை படிக்காமல் பட்டம் பெற முடியும் அவலம் ஆகும். தமிழ்நாட்டில் தமிழ் மொழியைக் கட்டாயப்பாடமாக்க வேண்டியது அரசின் அடிப்படைக் கடமையாகும். அதைக் கூடச் செய்யாமல் அன்னைத் தமிழைக் காப்போம்; தமிழுக்கு பெருமை சேர்ப்போம் என்றெல்லாம் முழங்குவதில் பயனும் இல்லை; பொருளும் இல்லை.
தமிழ்க் கட்டாயப்பாடச் சட்டம் இயற்றப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன. தமிழ்நாட்டில் தமிழ்க் கட்டாயப்பாடம் என்ற கனவு இன்னும் நிறைவேற்றப்படாமல் இருப்பது முறையல்ல, எனவே, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவுபடுத்தி அடுத்த ஆண்டிலாவது பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் தமிழ்க் கட்டாயப்பாடம் ஆக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment