Published : 29 Mar 2025 05:44 AM
Last Updated : 29 Mar 2025 05:44 AM
தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர்களுக்கான அடிப்படை கூலி மற்றும் அகவிலைப்படி தலா 10 சதவீதம் உயர்த்தப்படும் என்று அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின் நிறைவாக அமைச்சர் ஆர்.காந்தி பதிலளித்து பேசும்போது, ‘‘திமுக ஆட்சியில் நெசவாளர்களின் வாழ்வில் வசந்தம் ஏற்பட்டுள்ளது. அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வாயிலாக கைத்தறி தொழிலாளர்கள் பயன் பெற்றுள்ளனர். கடந்த ஆட்சியில் நஷ்டத்தில் இயங்கிய கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தற்போது லாபத்தில் செயல்பட்டு வருகிறது. கோ-ஆப்டெக்ஸ் வளர்ச்சிக்காக பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’’ என்றார்.
தொடர்ந்து சட்டப்பேரவையில் அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்ட அறிவிப்புகள் விவரம்: தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர்களின் அடிப்படை கூலியில் 10 சதவீதமும், அகவிலைப்படியில் 10 சதவீதமும் உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம் 1.5 லட்சம் நெசவாளர்கள் பயன் அடைவார்கள். வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின்கீழ் பெடல் தறி சேலைகளுக்கான நெசவுக் கூலி ரூ.75.95 ஆகவும், வேட்டிகளுக்கு ரூ.64.38 ஆகவும் உயர்த்தி தரப்படும். இதனால் ஏற்படும் கூடுதல் செலவினம் ரூ.3.75 கோடியை தமிழக அரசே ஏற்கும்.
இதேபோல், விசைத்தறி வேட்டி, சேலைக்கான நெசவுக் கூலியும் உயர்த்தப்படுவதுடன், அதற்கான கூடுதல் செலவினம் ரூ.8.58 கோடியையும் அரசே ஏற்கும்.
இதுதவிர கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களால் உற்பத்தி செய்யப்படும் புதிய ரகங்களை அறிமுகம் செய்ய ரூ.1.55 கோடி நிதியுதவி வழங்கப்படும். கைத்தறி துணிகள் விற்பனையை அதிகரிப்பதற்கு மாநில அளவிலான 5 சிறப்பு கண்காட்சிகள் ரூ.1.5 கோடியில் நடத்தப்படும்.
மாநில அளவிலான சிறந்த வடிமைப்பாளர் விருதுக்கான பரிசுத் தொகை உயர்த்தப்பட்டு முதலிடத்துக்கு ரூ.1 லட்சம், 2-ம் இடத்துக்கு ரூ.75,000, 3-ம் இடத்துக்கு ரூ.50,000 தரப்படும். கோ-ஆப்டெக்ஸ் விற்பனையை அதிகரிக்க தனி உரிமை விற்பனை நிலையங்கள் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
ஜவுளி தொழில் குறித்த சர்வதேச கண்காட்சி ரூ.1.5 கோடியில் ஆண்டுதோறும் நடத்தப்படும். மேலும், 6 கூட்டுறவு நூற்பாலைகளின் தரத்தை மேம்படுத்த ரூ.6.3 கோடியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment