Published : 29 Mar 2025 01:12 AM
Last Updated : 29 Mar 2025 01:12 AM

நகரங்களை திட்டமிட்டு உருவாக்க வேண்டும்: இந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

மக்களின் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித் திறனை உயர்த்தும் வகையில் நகரங்கள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட வேண்டும் என்று சிஐஐ மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

சென்னையில் நேற்று இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில், இந்திய நகரங்களில் வாழக்கூடிய சூழலை உருவாக்குவது குறித்த மாநாடு நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

இந்தியாவின் வளர்ச்சியில், தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாட்டின், இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. உற்பத்தித் துறை மொத்த மதிப்புக் கூட்டலில், தமிழகம் 12.11 சதவீதம் பங்களிப்பு செய்கிறது. கடந்த 3 ஆண்டுகளில், தமிழகம் 8 சதவீதத்துக்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சி கண்டுள்ளது. தமிழகத்தின் தனித்தன்மையான வளர்ச்சியை மேலும் மேம்படுத்த, 2030-க்குள் ஒரு டிரில்லியன் பொருளாதார இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி மட்டுமின்றி, ஒட்டுமொத்த வளர்ச்சியை இலக்காக கொண்டுள்ளதால்தான், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் தனித்து விளங்குகிறது. தமிழகம் நகரமயமாக்கப்பட்டது மட்டுமல்ல, தொழில்மயமாக்கப்பட்ட மாநிலமும் ஆகும். இந்தியாவின் மொத்த மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் 37.1 சதவீதத்துடன் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. கடந்த 11 மாதங்களில் 12.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்து புதிய உச்சத்தை தொட்டுள்ளோம்.

தொழில் துறைக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக, பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளோம். அதாவது, ரூ.500 கோடியில் தமிழ்நாடு செமிகன்டக்டர் மிஷன், சூலூர் மற்றும் பல்லடத்தில் தலா 100 ஏக்கரில் செமி கன்டக்டர் உற்பத்திப் பூங்கா, சென்னைக்கு அருகில் உலகளாவிய நகரம் என பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம்.

நகர்ப்புற உட்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் இந்த ஒத்துழைப்பு தொடரும். பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் நகரங்களுக்கு இந்த வளர்ச்சியோடு மக்கள் வாழ எல்லா வகையிலும் ஏற்றதாக இருக்க வேண்டும். மக்களின் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித் திறனை உயர்த்தும் வகையில் நகரங்கள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட வேண்டும்.

சென்னையை ஒரு உலக தரத்திலான நகரமாக உருவாக்க, மூன்றாவது முழுமைத் திட்டத்தை (3rd Master Plan) தயாரித்துக்கொண்டு வருகிறோம். மாநில அரசு சார்பாக கோயம்புத்தூர், மதுரை, ஓசூர், சேலம், திருப்பூர், திருச்சிராப்பள்ளி, வேலூர், திருநெல்வேலி உள்ளிட்ட 136 நகரங்களுக்கு முழுமைத் திட்டங்களை உருவாக்கி வருகிறோம். இதன்மூலம் நகர விரிவாக்கங்கள் நடைபெறும்போது மக்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் மேம்படும். பசுமை இயக்கத்தின் முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது. பசுமை ஹைட்ரஜன் திட்டங்களிலும் முக்கிய முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. நகர்ப்புற நிலைத்தன்மைக்கு நீர் பாதுகாப்பும் கழிவு மேலாண்மையும் மிகவும் முக்கியம். இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு நீர் பாதுகாப்பு திட்டம் மூலம் மழைநீர் சேகரிப்பு, ஏரிகள் புதுப்பித்தல், மற்றும் நீர்வளங்களை திறம்பட நிர்வகித்தல் போன்ற நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறோம்.

திடக்கழிவு மேலாண்மை மற்றும் சர்க்குலர் எக்கானமி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கி, மறுசுழற்சி மற்றும் கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டங்கள் ஊக்குவிக்கப்படுகிறது. தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் மூலம், கார்பன் பயன்பாட்டை குறைத்து, காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ள நினைக்கிறோம். எனவே, மின்சார போக்குவரத்து, நிலையான கட்டுமானம் மற்றும் தூய்மையான தொழில்நுட்பம் போன்ற பசுமை பொருளாதாரத் துறைகளில் முதலீடு செய்யுங்கள்.

வாழ்வதற்கேற்ற, நிலைத்தன்மை கொண்ட மற்றும் செழிப்பு நிறைந்த நகரங்களை உருவாக்குவதுதான் நம் இலக்கு. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x