Last Updated : 28 Mar, 2025 10:04 PM

 

Published : 28 Mar 2025 10:04 PM
Last Updated : 28 Mar 2025 10:04 PM

கோவை மாநகராட்சி பட்ஜெட் முக்கிய அம்சங்கள் என்னென்ன? - கல்வி, மருத்துவத்துக்கு முக்கியத்துவம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தில், பட்ஜெட் அறிக்கையை வெளியிட்ட மேயர் கா.ரங்கநாயகி. அருகில், ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயர் ரா.வெற்றிச்செல்வன், நிதிக்குழு தலைவர் முபசீரா. படம்: ஜெ.மனோகரன் 

கோவை: கோவை மாநகராட்சியின் பட்ஜெட் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாநகராட்சியின் நிகரப் பற்றாக்குறை ரூ.139.83 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், பட்ஜெட் (நிதிநிலை அறிக்கை) தாக்கல் செய்யும் சிறப்புக் கூட்டம், பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா மன்ற வளாகத்தில் நடந்தது. மேயர் கா.ரங்கநாயகி தலைமை வகித்தார். ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயர் ரா.வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்ஜெட் அடங்கிய புத்தகத் தொகுப்பை, நிதிக்குழு தலைவர் வி.ப.முபசீரா, மேயர் ரங்கநாயகியிடம் வழங்கினார். தொடர்ந்து மேயர், ஆணையர், துணை மேயர், நிதிக்குழு தலைவர் ஆகியோர் பட்ஜெட்டை அறிக்கையை வெளியிட்டனர். அதைத்தொடர்ந்து பட்ஜெட்டில் உள்ள சிறப்புகள் குறித்து மேயர் வாசித்தார். அதைத் தொடர்ந்து, நிதிக்குழு தலைவர் முபசீரா பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.

அப்போது நிதிக்குழு தலைவர் பேசும்போது, ‘‘நடப்பு 2025-26-ம் நிதியாண்டில் மாநகராட்சி வருவாய் வரவினம் மற்றும் மூலதன வரவினம் மொத்தம் ரூ.4,617.33 கோடியாகும். வருவாய் செலவினம் மற்றும் மூலதன செலவினம் மொத்தம் ரூ.4,757.16 கோடியாகும். இதனால் நடப்பு நிதியாண்டில் நிகரப் பற்றாக்குறை ரூ.139.83 கோடியாக உள்ளது. இதில், பொது நிதி வரவினம் ரூ.2,661.78 கோடியாகவும், செலவினம் ரூ.2,810.61 கோடியாகவும், குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் நிதி வரவினம் ரூ.1,853.85 கோடியாகவும், செலவினம் ரூ.1,846.71 கோடியாகவும், ஆரம்பக் கல்வி நிதி வரவினம் ரூ.101.70 கோடியாகவும், செலவினம் ரூ.99.84 கோடியாகவும் உள்ளது’’ என்றார்.

மாநகராட்சியின் நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் கல்வி, மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 17 மாநகராட்சி மேல்நிலை பள்ளிகள், 10 உயர்நிலை பள்ளிகளில் 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு செய்முறை பயிற்சிக்கு அறிவியல் ஆய்வகங்கள் ரூ.1 கோடி ஒதுக்கப்படுகிறது. 5 மண்டலங்களில் உள்ள பள்ளிகளில் ரூ.5 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறை கட்டப்படும். எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.10 லட்சத்தில் சென்னை ஐ.ஐ.டி., பெங்களூரு ஐ.ஐ.எம்., டெல்லி பல்கலைக்கழகத்துக்கு சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள்.

மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்-2 முடித்து மேல்படிப்புக்காக ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவ கல்வியில் சேர்க்கை பெறும் மாணவ - மாணவிகளுக்கு முதலாம் ஆண்டு கல்வி கட்டணமாக ஒருவருக்கு ரூ.25 ஆயிரம் மாநகராட்சி நிதியில் இருந்து வழங்கப்படும். அத்துடன் நீட் போன்ற நுழைவுத்தேர்வுக்கான பயிற்சியும் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இதற்காக ரூ.10 லட்சம் ஒதுக்கப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஒரு பாடத்தில் 100 சதவீதம் மதிப்பெண் பெறுவோருக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு ரூ.25 லட்சம் ஒதுக்கப்படுகிறது என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x