Published : 28 Mar 2025 06:59 PM
Last Updated : 28 Mar 2025 06:59 PM

“விஜய்க்கு அரசியல் புரிதலே இல்லை!” - அண்ணாமலை சரமாரி தாக்கு

அண்ணாமலை | விஜய்

புதுடெல்லி: “‘குருவி’ படத்தின் மூலம் ரெட் ஜெயின்ட் மூவிஸுக்குத் திறப்பு விவா நடத்தியதே விஜய்தான். அவர்தான் தமிழக மக்களுக்கு ரெட் ஜெயின்ட் மூவிஸை அறிமுகப்படுத்தினார். ‘பீஸ்ட்’ உட்பட இன்னொரு விஜய்யின் இன்னொரு படத்தின் தயாரிப்பு மட்டும் அல்ல, விநியோகத்தையும் ரெட் ஜெயின்ட்தான் பார்த்தது. நான் ஆதாரத்தின் அடிப்படையில் கூறுகிறேன்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

டெல்லியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று (மார்ச் 28) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “நான் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துவிட்டேன். அதேபோல் பாஜக தேசியத் தலைவர் நட்டா மற்றும் அமைப்பு பொதுச் செயலாளர் சந்தோஷ் ஆகிய மூவரையும் சந்தித்திருக்கிறேன். இந்த சந்திப்பின்போது, தமிழக பாஜகவின் வளர்ச்சி மற்றும் பணிகள் குறித்து விவாதித்தோம். 2026 தேர்தலைப் பொறுத்தவரை, தமிழகத்துக்கு மிக முக்கியமான தேர்தல் என்பதில் தெளிவாக இருக்கிறோம். தமிழகத்தை ஆளும் திமுக அரசு மீது நாங்கள் குற்றம் சுமத்துகிறோம். திமுக செய்யும் தவறுகளை எங்களுடைய பார்வையில் மக்கள் முன் எடுத்துவைக்கிறோம்.

என்னைப் பொறுத்தவரை, 2026 தேர்தல் தமிழக மக்களின் நலனுக்கான தேர்தலாகப் பார்க்கிறேன். கூட்டணிக்கான நேரம், காலம், அவகாசம் அதற்கு எல்லாம் இன்னும் ரொம்ப தூரம் இருக்கிறது. கிட்டத்தட்ட 9 முதல் 10 மாதங்கள் இருக்கிறது. களத்தில் இன்னும் நிறைய விஷயங்கள் நடந்துகொண்டிருக்கிறது. பாஜக நலனைவிட முக்கியமானது தமிழக மக்களின் நலன். இதையெல்லாம் ஆலோசித்து, கூட்டணி குறித்து உரிய நேரத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் பேசுவார்கள்.

மாநிலத் தலைவராக என்னுடைய கருத்தை தலைவர்களிடம் கூறியிருக்கிறேன்.அதேபோல், 2026-ல் திமுக ஆட்சியிலிருந்து இறக்கப்பட வேண்டும் என்ற தொண்டர்களின் கருத்தையும் தலைவர்களிடம் கூறியிருக்கிறேன். கூட்டணியைப் பற்றி இப்போதைக்கு பேச வேண்டிய அவசியம் இல்லை. கிட்டத்தட்ட தேர்தல் வருவதற்கு ஓராண்டு காலம் இருக்கிறது. எங்களுடைய எதிரி திமுக. அவர்கள் ஆட்சியில் இருந்து இறக்கப்பட வேண்டும் என்பதில் தெள்ளத் தெளிவாக இருக்கிறோம். இன்னும் கொஞ்ச நாட்களில் பாஜக மாநிலத் தலைவர், தேசிய தலைவர் தேர்தல் வரவிருக்கிறது. அந்த சமயத்தில் என்னுடைய கருத்துகளைத் தெரிவிக்கிறேன்.

தமிழகத்தில் தவெக பொதுக் குழுக் கூட்டம் நடக்கிறது. விஜய் மற்றும் அவருடன் மேடையில் பேசுபவர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் என்பது வெறும் மைக்கை கையில் எடுத்துப் பேசிவிட்டு போவது கிடையாது. களத்தில் நின்று வேலை பார்ப்பது அரசியல். விஜய் நன்றாக இதைக் கேட்டுக்கொள்ள வேண்டும். 1973-ல் தொகுதி மறுசீரமைப்பு நடக்கும்போது, இந்தியாவின் மக்களவை இடங்களின் எண்ணிக்கை 525-ல் இருந்து 545 ஆக உயர்த்தப்படுகிறது. 20 இடங்கள் உயர்த்தப்பட்டது. இந்த 20 இடங்களில் தமிழகத்துக்கு எத்தனை இடங்கள் கிடைத்து? பூஜ்ஜியம்.

20 இடங்களை உயர்த்தியும், 1973-ல் தமிழகத்துக்கு ஓர் இடம்கூட கிடைக்கவில்லை. சில மாநிலங்களுக்கு 3 இடங்கள், 2 இடங்கள், ஓர் இடம் அதிகமானது. அன்று ஆட்சியில் இருந்தது யார்? காங்கிரஸ். தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தது. இந்திரா காந்தி கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க சென்றவர் மறைந்த முதல்வர் கருணாநிதி தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்டார். இந்தியாவின் மக்களவையில் 20 இடங்கள் அதிகரித்தபோது, கருணாநிதி தமிழகத்துக்கு ஓர் இடத்தைக்கூட வாங்கித் தரவில்லை. நியாயப்படி விஜய் குற்றச்சாட்டு வைப்பதாக இருந்தால் யார் மீது வைக்க வேண்டும்? அப்போது விஜய் தண்ணி யாருக்குக் காட்டணும்? காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் காட்ட வேண்டும்.

2026-ல் பாஜக செய்கிற தொகுதி மறுசீரமைப்பு ஒருவேளை வரும்போது, தமிழகத்துக்கு குறைவான இடங்கள் கிடைத்தால் சொல்லுங்கள். நான் ஆதாரத்தின் அடிப்படையில் பேசுகிறேன். எனவே, விஜய் பேசும்போது ஓர் அரசியல் புரிதலோடு பேச வேண்டும். அரசியலைப் பொறுத்தவரை ஒரு ரவுடியை அடித்தால்தான் மற்றொரு ரவுடியை மக்கள் ரவுடி என்று ஏற்றுக்கொள்வார்கள். இதெல்லாம் சினிமா வசனங்கள். இவர்கள் அனைவரையும் பார்த்தோம் என்றால், அரசியலில் யார் சக்தி வாய்ந்தவர்களாக இருக்கிறார்களோ, அவர்களைப் பற்றி பேசினால் ஒரு மைலேஜ் கிடைக்கும்.

ராகுல் காந்தியைப் பற்றி விஜய் பேச முடியுமா? பேச முடியாது. விஜய் ஒருவர் மீது குற்றச்சாட்டு வைக்கிறார் என்றால், பிரதமர் மீதுதான் வைக்க முடியும். காரணம் மீடியா வெளிச்சம். அதற்காக பேசுகிறார். ஆதாரத்தின் அடிப்படையில் பேசினால் நான் பதில் தருகிறேன்.

‘குருவி’ படத்தின் மூலம் ரெட் ஜெயின்ட் மூவிஸுக்குத் திறப்பு விவா நடத்தியதே விஜய்தான். அவர்தான் தமிழக மக்களுக்கு ரெட் ஜெயின்ட் மூவிஸை அறிமுகப்படுத்தினார். ‘பீஸ்ட்’ உட்பட இன்னொரு விஜய்யின் இன்னொரு படத்தின் தயாரிப்பு மட்டும் அல்ல, விநியோகத்தையும் ரெட் ஜெயின்ட்தான் பார்த்தது.நான் ஆதாரத்தின் அடிப்படையில் கூறுகிறேன்.

இன்று மேடையில் ஏறி வாய் கிழிய தவெகவினர் பேசுகின்றனர். தவெக-வில் இருக்கும் ஒருவர் லாட்டரிப் பணத்தை வைத்து,திமுகவுக்கு வேலைப் பார்த்தார். அங்கிருந்த விசிக-வுக்குத் தாவினார். இப்போது விசிக-வில் இருந்து தவெக-வுக்கு தாவியிருக்கிறார். தமிழக வெற்றிக் கழகத்தை, லாட்டரி விற்பனைக் கழகமாக மாற்ற வேண்டும் என்பது அவரது ஐடியா” என்று அவர் கூறினார். | விஜய் பேசியது என்ன? > “மன்னராட்சி முதல்வர்”, “மோடி அவர்களே...” - தவெக பொதுக் குழுவில் விஜய்யின் 15 தெறிப்புகள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x