Published : 28 Mar 2025 05:06 PM
Last Updated : 28 Mar 2025 05:06 PM
கோவில்பட்டி: தமிழகம் முழுவதும் பொது விநியோக திட்டத்தின் கீழ் சுமார் 2 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. இதில், AAY, PHH, NPHH, NPHHS, H என, 5 வகை குடும்ப அட்டைகள் உள்ளன. AAY, PHH என்பது வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைகள். NPHH என்பது விளிம்பு நிலை அற்ற அட்டை. H என்பது கவுரவ மற்றும் முகவரி அடையாளத்துக்காக வழங்கப்பட்ட அட்டையாகும்.
AAY அட்டைக்கு மாதம் 35 கிலோ அரிசியும், PHH அட்டைக்கு குடும்ப உறுப்பினர்கள் 4 பேர் வரை 20 கிலோ அரிசியும், 4 பேருக்கு மேல் உள்ள குடும்ப அட்டைக்கு ஒவ்வொரு நபருக்கும் 5 கிலோ அரிசியும், சர்க்கரை அதிகபட்சமாக 2 கிலோவும் வழங்கப்படுகிறது. NPHH குடும்ப அட்டை என்பது எத்தனை நபர்கள் இருந்தாலும் அதிகபட்சம் 20 கிலோ அரிசியும், நபர் ஒன்றுக்கு அரை கிலோ வீதம் சர்க்கரையும் வழங்கப்படுகிறது.
AAY, PHH அட்டைதாரர்களுக்கு முழு மானியத்தில் மத்திய அரசு அரிசி வழங்குகிறது. NPHH அட்டைதாரர்களுக்கு மாநில அரசு மானியத்தில் அரிசி வழங்குகிறது. AAY, PHH குடும்ப அட்டை வைத்துள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ரேஷன் கடையில் பயோ மெட்ரிக் இயந்திரத்தில் கைரேகை பதிவு செய்ய மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக கைரேகை பதிவு செய்யப்பட்டு வருகிறது.
ஏப்ரல் 1-ம் தேதிக்கு முன் கைரேகை பதிவு செய்யத் தவறினால் பொருட்கள் விநியோகிக்கப்படாது எனக் கூறப்படுகிறது. AAY, PHH அட்டையில் உள்ளவர்கள் சிலர் பணி நிமித்தமாக வெளியூரில் தங்கியும், சிலர் படிப்புக்காகவும், சிலர் மருத்துவ சிகிச்சைக்காகவும் வெளி இடங்களில் உள்ளனர். அவர்களுக்கு ரேஷன் அரிசி ஜீவாதாரமாகும். எனவே, கைரேகை பதிவு செய்ய ஏப்ரல் 30-ம் தேதி வரை காலநீட்டிப்பு வழங்க வேண்டும் என, குடும்ப அட்டைதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விலைக்கு விற்றால் நடவடிக்கை: NPHH குடும்ப அட்டைகளுக்கு மாநில அரசு விவசாயிகளிடம் நெல் கிலோ ரூ.25-க்கு கொள்முதல் செய்கிறது. அதை அவித்து அரிசியாக தீட்டுவதற்கு கூடுதலாக ரூ.12 செலவு என, மொத்தம் ஒரு கிலோ அரிசிக்கு ரூ.37 செலவாகிறது. இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவாகிறது.
இந்நிலையில் சிலர் மானியத்தில் வழங்கும் அரிசியை லாப நோக்கில் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
ரேஷன் அரிசியை விற்பவர்கள் மீதும், அதனை கொள்முதல் செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...