Published : 28 Mar 2025 04:54 PM
Last Updated : 28 Mar 2025 04:54 PM
சென்னை: எழும்பூர் அரசு அருங்காட்சியகத்துக்கு எதிரே நடைபாதையில் அமைந்துள்ள பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு பெட்டிக்குள்ளும், நடைபாதையிலும் சிதறி கிடக்கும் மதுபாட்டில்களால் அப்பகுதியில் நடந்து செல்லும் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை எழும்பூர், பாந்தியன் சாலையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்துக்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதே வளாகத்தில் கன்னிமாரா பொது நூலகமும், தேசிய கலைக்கூடமும் செயல்பட்டு வருவதால் சுற்றுலாப் பயணிகளுடன் மாணவர்களும், இளைஞர்களும் அதிகளவில் வருகை தருகின்றனர்.
அதே சாலையில் ஹோட்டல்கள், உணவு விடுதிகள், வணிக வளாகங்கள், பூங்கொத்து விற்பனை செய்யும் கடைகள், கிறிஸ்தவ திருச்சபைகள், புத்தக கடைகள் போன்றவையும் இயங்கி வருகின்றன. இந்நிலையில் பாந்தியன் சாலையில் அரசு அருகாட்சியகத்துக்கு எதிர்புறம் ஒரு அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது.
ஹோட்டல்களுக்கு மத்தியில் இயங்கும் மதுபானக் கடைக்கு நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாக வருகிறது. ஆனால் கடையில் மதுவாங்கி செல்லும் பெரும்பாலான குடிமகன்கள், கடைக்கு எதிரே பாந்தியன் சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தின் கீழ்பகுதியிலும், மதுக்கடையை ஒட்டியிருக்கும் நடைபாதைகளிலும் அமர்ந்து குடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
அவ்வாறு குடிக்கும் மதுப்பிரியர்கள் குடித்த மது பாட்டில்களை மேம்பாலத்தின் அடியிலும், மதுக்கடையை ஒட்டியுள்ள நடைபாதைகளிலும் அப்படியே போட்டுவிட்டுச் செல்கின்றனர். குறிப்பாக மதுக்கடை அமைந்திருக்கும் அதே சாலையில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்பயிற்சி நிலையம் (ஐடிஐ) மற்றும் திருச்சபையின் முன்பாக நடைபாதையிலேயே குடித்துவிட்டு ஏராளமான பாட்டில்களை போட்டுவிடுகின்றனர்.
ஐடிஐக்கு வரும் மாணவர்களும், திருச்சபைக்கு வரும் பெண்களும் நடைபாதையில் குவிந்து கிடக்கும் மதுப்பாட்டில்களை கடந்து செல்லும்போது அவதிக்கு ஆளாகின்றனர். சில நேரங்களில் பாட்டில்களை உடைத்தும் போடுகின்றனர். இதனால் வெறும் காலுடன் நடந்து செல்வோரும் நாய், அணில் போன்ற ஜீவராசிகளும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் சிலர் குடித்துவிட்டு மதுபாட்டில்களை ஐடிஐக்கு முன்பு அமைந்துள்ள மின் இணைப்பு பெட்டியின் பின்புறம் குவியலாக போட்டுவிட்டு செல்கின்றனர். மேலும் சிலர் அங்கு அமைந்துள்ள தொலைபேசி இணைப்பு (பில்லர்பாக்ஸ்) பெட்டிக்குள் பாட்டில்களை போட்டுவிட்டுச் செல்கின்றனர். இதனால் மின் இணைப்பு பெட்டியின் பின்புறம் தினந்தோறும் 20-க்கும் அதிகமான மதுபாட்டில்களை காணமுடிகிறது.
இதுகுறித்து எழும்பூரை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் கூறியதாவது: பாந்தியன் சாலையில் அருங்காட்சியத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் எதிர்புறம் உள்ள ஹோட்டல்களுக்கு வந்து உணவருந்துகின்றனர். இந்நிலையில் இவைகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் அரசு மதுபானக் கடையில் இருந்து மது வாங்கிச் செல்வோர் பாந்தியன் மேம்பாலத்தின் கீழ் அமர்ந்தும், அருகே உள்ள நடைபாதையில் அமர்ந்தும் மது குடிப்பது அதிகரித்து வருகிறது.
நடைபாதை முழுவதும் அவர்கள் போட்டு செல்லும் மதுபாட்டில்கள் சமூக சீர்கேட்டுக்கு வழிவகுக்கும். அதேபோல் அருகில் அமைந்திருக்கும் மின் இணைப்பு பெட்டியையும், தொலைபேசி பில்லர் பாக்ஸையும் குடிகாரர்கள் விட்டுவைக்கவில்லை. பாட்டில்களை போடுவதுடன் அவற்றை சேதப்படுத்துவதுடன் ஆபத்தையும் விளைவிப்பார்கள்.
பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் என அனைவருமே இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து நடைபாதைகளில் அமர்ந்து குடிப்பதை தடுக்கவும், பாட்டில்களை ஆங்காங்கே போடுவதை தவிர்க்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக மின் இணைப்பு பெட்டி, தொலைபேசி பில்லர் பாக்ஸ் ஆகியவற்றை முறையாக பராமரித்து, மதுபாட்டில்களை அதில் போடாதவாறு துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...