Published : 28 Mar 2025 04:52 PM
Last Updated : 28 Mar 2025 04:52 PM

சட்டம் - ஒழுங்கு குறித்து பேச அனுமதி கோரி அமளி: பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு வெளியேற்றம்

பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள்

சென்னை: சட்டப்பேரவையில் தமிழக சட்டம் - ஒழுங்கு தொடர்பாக பேச அனுமதி கோரி அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் இன்று (மார்ச் 28) கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 28) கேள்வி நேரம் முடிந்த பிறகு, துணை முதல்வர் உதயநிதி தனது துறைகள் மீதான மானிய கோரிக்கை குறித்து பதிலுரையை தொடங்கினார். அப்போது, நேரமில்லா நேரத்தில் தமிழக சட்டம் - ஒழுங்கு தொடர்பாக பேச எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அனுமதி கோரினார்.

அப்போது, பேரவை தலைவர் அப்பாவு, “இன்று 4 அமைச்சர்கள் பதில் அளிக்க வேண்டியுள்ளது. அதனால் பிறகு நேரம் ஒதுக்கப்படும். நேரமில்லா நேரத்தில் பேச வேண்டிய பொருள் குறித்து பேரவைத் தலைவரிடம் அவை தொடங்குவதற்கு 30 நிமிடம் முன்பாக தெரிவிக்க வேண்டும் என்பது மரபு, விதி. ஆனால் அதிமுக கொறடா என்னை 9.18 மணிக்கு சந்தித்து காவல் துறை தொடர்பாக பேச இருப்பதாக தெரிவித்தார். நான் ஏற்கெனவே 30 நிமிடங்கள் முன்பாக நேரமில்லா நேர பொருள் குறித்து தெரிவிக்க வேண்டும் என்று கூறி, இதுதான் கடைசி என ஏற்கெனவே வாய்ப்பு கொடுத்திருக்கிறேன்” என்றார்.

அப்போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “அதிமுக ஆட்சியில் இந்த பதிலை, பேரவைத் தலைவராக இருந்த தனபால் பலமுறை கூறி இருக்கிறார். அவரின் வழிகாட்டுதலை தான் இப்போது பின்பற்றுகிறோம்” என்றார். தொடர்ந்து அவை முன்னவர் துரைமுருகன், “பேச வேண்டிய பொருள் குறித்து முன்கூட்டியே கொடுத்தால் தான் அதற்கான பதிலை பெற்றுத்தர முடியும். அவகாசம் கொடுக்காமல் ஒரு பொருள் குறித்து பேசினால் எங்களிடம் பதில் இருக்காது. அப்படி எனில் அப்பொருள் குறித்து பேரவைத் தலைவர் யாரையும் பேச அனுமதிக்கக்கூடாது” என்றார்.

இப்பதிலை ஏற்க மறுத்து பேச வாய்ப்பளிக்கக் கோரி அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் பேரவைத் தலைவர் அருகில் வந்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது எழுந்து நின்று பேசிய அப்பாவு, “பேரவைத் தலைவர் நின்று பேசினால், உறுப்பினர்கள் அனைவரும் அமர வேண்டும் என்பது மரபு” என்றார். அதை பொருட்படுத்தாமல் அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமைதி காத்து தனது இருக்கையில் அமர்ந்திருந்தார்.

அப்போது முதல்வர் ஸ்டாலின், “பேரவையில் 30 நிமிடங்களுக்கு முன்பாக பேச வேண்டிய பொருள் குறித்து தெரிவிப்பது மரபு. அந்த பொருள் குறித்து நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். எதிர்க்கட்சி நினைத்ததை எல்லாம் பேச பேரவையில் அனுமதிக்க முடியாது” என்றார்.

அவையில் தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், அவர்களை வெளியேற்றுமாறு பேரவை காவலர்களுக்குப் பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். அதிமுக எம்.எல்.ஏக்களை குண்டுகட்டாக தூக்கி வெளியேற்ற முற்பட்டபோது, அவர்களாகவே, கூச்சலிட்டவாறு வெளியேறினர். அவர்களை நாள் முழுவதும் அவையிலிருந்து வெளியேற்றுவதாக அப்பாவு அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசும்போது: “தமிழகத்தில் பொது அமைதி நிலவுகிறது. மக்கள் அமைதியாக, இணக்கமாக வாழ்கிறார்கள். இதனால் தான் தொழில் முதலீடு, புதிய தொழிற்சாலைகள், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என தமிழகம் முன்னேற்ற பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வுகளையும், சூழல்களையும் தாங்கிக் கொள்ள முடியாத சில மாநில துரோக சக்திகள், தமிழ் மக்கள் விரோத சக்திகள், அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் கொலைகள், கொள்ளை போன்ற ஒரு சில நிகழ்வுகளை ஊதி பெரிதாக்கி மக்களை பீதி அடைய வைக்கின்றனர்.

மக்களின் பாதுகாப்புக்காக இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கும் தமிழக காவல்துறைக்கு இழுக்கு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். அதற்கு பிரதான எதிர்க்கட்சியும் துணை போகும் வகையில் தூபம் போடுகிறது. தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்த முடியுமா? எனத் துடிக்கின்றனர்.அதிமுக ஆட்சியில் எத்தனை கலவரங்கள் நடைபெற்றன என்பது அனைவருக்கும் தெரியும். அதுபோன்ற எந்த கலவரங்களும் இந்த ஆட்சியில் இல்லை. குற்றங்களின் எண்ணிக்கை இந்த ஆட்சியில் குறைந்து வருகிறது.

புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து, வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஆளுங்கட்சி சேர்ந்தவர்களாக இருந்தாலும் வழக்கு போடப்படுகிறது, கைது செய்யப்படுகிறார்கள், தண்டிக்கப்படுகிறார்கள். இதுதான் உண்மை. இப்படி பல்வேறு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து மக்களை காவல் துறையும் தமிழக அரசும் பாதுகாத்து வருகிறது.

சில நேரங்களில் நடைபெறும் தொடர் சம்பவங்களை வைத்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக மக்களை திசை திருப்புவதற்காகவே வீண் புரளிகளை கிளப்பாமல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும், அவர் கூட்டணி வைக்க துடித்துக் கொண்டிருக்கும் கட்சியாக இருந்தாலும் ஆக்கப்பூர்வமான அரசியல் செய்ய முன் வாருங்கள்.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் அதிமுகவின் முந்தைய ஜெயலலிதா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான 10 ஆண்டு ஆட்சிகளிலும் சரி, எங்கள் ஆட்சியிலும் சரி, நடைபெறும் குற்ற சம்பவ தரவுகளை வைத்து தான் காவல்துறையின் செயல்பாட்டை அளவிட முடியும். குறிப்பிட்ட சில சம்பவங்களை வைத்து சட்டம் - ஒழுங்கு குறித்த தவறான விவாதத்தை உருவாக்க வேண்டாம். அரசின் மீது ஆக்கப்பூர்வமான குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். அரசியல் செய்வதற்காக காவல்துறையையும், அமைதியான மாநிலம் தமிழகம் என்ற பெயரை கெடுப்பதற்கும் துணை போகாதீர்கள்” என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x