Published : 28 Mar 2025 02:05 PM
Last Updated : 28 Mar 2025 02:05 PM
திருவள்ளூர்: சென்னை குடிநீர் தேவைக்காக, ஆந்திர மாநிலம்- கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லைக்கு வந்தடைந்தது.
சென்னையின் குடிநீர் தேவைக்காக, தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஆந்திர அரசு ஆண்டு தோறும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி, ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி என, 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை தமிழகத்துக்கு வழங்கவேண்டும். அந்த வகையில், ஆந்திர அரசு, சென்னைக் குடிநீருக்காக ஜனவரி முதல் ஏப்ரல் வரை வழங்கவேண்டிய கிருஷ்ணா நீரை வழங்கவேண்டும் எனக் கோரி, தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள், ஆந்திர நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு சமீபத்தில் கடிதம் எழுதினர்.
இதையடுத்து, சென்னைக் குடிநீருக்காக ஆந்திர மாநிலம் -கண்டலேறு அணையில் இருந்து, தெலுங்கு- கங்கை திட்ட கால்வாய் மூலம் கிருஷ்ணா நீரை கடந்த 24-ம் தேதி பகல் 12 மணியளவில், ஆந்திர நீர் வளத்துறையினர் திறந்து வைத்தனர். தொடக்கத்தில் விநாடிக்கு 500 கன அடி என, திறக்கப்பட்டு வந்த கிருஷ்ணா நீரின் அளவு , நேற்று காலை 800 கனடியாக அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள கிருஷ்ணா நீர், 152 கி.மீ., தூரம் பயணித்து, தமிழக எல்லையான, திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு இன்று (மார்ச் 28) காலை 10 மணியளவில் வந்தடைந்தது.
அப்போது விநாடிக்கு 52 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த கிருஷ்ணா நீரை, தமிழக நீர் வளத்துறையினர் மலர் தூவி வரவேற்றனர். தமிழக எல்லையை வந்தடைந்துள்ள கிருஷ்ணா நீர், 25 கி.மீ., தூரம் பயணித்து இன்று இரவு பூண்டி ஏரியை சென்றடையும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment