Published : 28 Mar 2025 09:40 AM
Last Updated : 28 Mar 2025 09:40 AM
சென்னை: தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெறவிருக்கும் சூழலில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்தை ‘வருங்கால முதல்வரே’ என்று குறிப்பிட்டு செங்கல்பட்டில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் சர்ச்சையான நிலையில் அது பற்றி ஆனந்த் விளக்கமளித்துள்ளார்.
தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் அவர், இது விஷமிகளின் செயல். தவெக தலைவர் விஜய் தான் முதல்வர் வேட்பாளர். 2026 தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதல்வராவார். காலை 10 மணிக்கு பொதுக் குழு தொடங்குகிறது. இந்நிலையில் சில விஷமிகள் வேண்டுமென்றே இத்தகைய போஸ்டரை ஒட்டியுள்ளனர். இது குறித்து கட்சியினர் விசாரித்து வருகின்றனர்” என்று கூறினார்.
முதல் கூட்டம்: தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் வெகு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்போது இன்று (மார்ச்.28) முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறுகிறது. இதில் 137 செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் 1800-க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் 120 மாவட்டங்களாக தமிழக வெற்றிக் கழகம் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மாவட்டச் செயலாளருடன் 15 பேர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கூட்ட அரங்குக்கு வெளியே மயிலாட்டம், ஒயிலாட்டம் என கலை நிகழ்ச்சிகள் களைகட்ட, கூட்டத்துக்கு வருபவர்கள் அவர்களின் அடையாள அட்டை சரி பார்க்கப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர். மதிய விருந்தாக 23 வகையிலான உணவுகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனது.
முக்கியத் தீர்மானங்களுக்கு வாய்ப்பு: பொதுக்குழு கூட்டத்துக்கு காலை 8 மணியளவிலேயே விஜய் வந்துவிட்டார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு நல்கினர். தொடர்ந்து கூட்டத்தில் விஜய் பல்வேறு முக்கியப் பிரச்சினைகளை முன்வைத்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கள அரசியலை முன்னெடுக்காமல் ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ அரசியல் செய்கிறார் விஜய் என்ற விமர்சனங்கள் உள்ள நிலையில் விஜய்யின் சுற்றுப்பயணம் குறித்து இந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதிமுக முன்னாள் நிர்வாகியின் ட்வீட்: பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே தவெக முதல் பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெறும் சூழலில் அதிமுக முன்னாள் நிர்வாகியான மருது அழகுராஜ் இன்று காலை தனது எக்ஸ் பக்கத்தில், "இலை"யுதிர் காலத்தை தனக்கான வசந்த காலமாக்கும் விஜய்.. அதிமுக இடத்தை தவெக கைப்பற்றுகிறது... "இராமச்சந்திரா" மாநாட்டு மண்டபத்தில் முதல் பொதுக்குழு. வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார். அதிமுக வீழும் சூழலில் இருப்பதாகவும் அதை தவெக பயன்படுத்திக் கொள்வதாகவும் பொருள்படும்படி அவர் இந்த ட்வீட்டைப் பதிவு செய்துள்ளார். அந்த ட்வீட்டுடன் எம்ஜிஆர் படத்தையும் விஜய் படத்தையும் இணைத்துப் பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment