Published : 28 Mar 2025 09:19 AM
Last Updated : 28 Mar 2025 09:19 AM
இபிஎஸ் - அமித் ஷா சந்திப்பு தமிழக அரசியலை மீண்டும் பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்துள்ள நிலையில், “தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித் ஷா சொல்லி இருப்பது அவரது விருப்பம்” என்று நழுவியிருக்கிறார் இபிஎஸ்.
அப்படியானால் பாஜக-வுடன் கூட்டணி இல்லையா என்று அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலரிடம் கேட்டோம். இதற்கு பதில் சொன்ன முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன், “அமித் ஷாவிடம் பழனிசாமி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக மக்கள் யாரும் சொல்லவில்லை. திமுக-வினரும் பாஜக-வினரும் அவர்களின் ஆதரவு சமூக வலைதளங்களும் தான் பரப்பி வருகிறார்கள். மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்துக்கு போதிய நிதி ஒதுக்குவதில்லை. நதிநீர் பங்கீட்டை தீர்ப்பதில்லை. ஓரவஞ்சனை தான் செய்கின்றனர்.
தமிழகத்தில் மும்மொழி கொள்கை பிரச்சினை, தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினை. சட்டம் - ஒழுங்கு சீர்கேடு என எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், பழனிசாமி தமிழக மக்களின் பிரச்சினைகள் குறித்து அமித் ஷாவை சந்தித்து முறையிடுவதில் எந்தத் தவறும் இல்லை.
அந்த உரிமை அவருக்கு இருக்கிறது. இதை சகித்துக்கொள்ள முடியாதவர்களே தவறான தகவலை பரப்புகின்றனர்” என்று சொன்னார். அதிமுக மகளிரணி செயலாளர் பா.வளர்மதியோ, “திமுக-வினர், செயல்படுத்தவே முடியாத திட்டங்களை செயல்படுத்துவதாக பொய்யைச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள். பாஜக-வுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக இவர்கள் தான் பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். திமுக என்றாலே பொய் தான். சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, டாஸ்மாக் ஊழல், மகளிருக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் போன்ற திமுக அரசின் தவறுகளை மறைக்க இதுபோன்று பரப்பி வருகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், மக்கள் பிரச்சினை குறித்து பேசத்தான் அமித் ஷாவை சந்தித்தார் இபிஎஸ். யாருடன் கூட்டணி வைத்தாலும் இறுதியில் மக்களைத் தான் சந்திக்க வேண்டும். அப்படி இருக்க, கூட்டணி குறித்து ரகசியமாக பேச வேண்டிய அவசியம் அதிமுக-வுக்கு இல்லை” என்று சொன்னார்.
அதிமுக பொருளாளரான திண்டுக்கல் சீனிவாசனிடமும் பாஜக கூட்டணிக்கு தயாராகிவிட்டீர்களா என்ற கேள்வியை முன்வைத்தோம். “இருவரும் என்ன பேசினார்கள் என்பது குறித்து, அந்த சந்திப்பில் பங்கேற்றவர்கள் தான் சொல்ல முடியும்; அது தான் சரியாக இருக்கும். கூட்டணி குறித்து பேசவில்லை என பழனிசாமியே அழுத்தம் திருத்தமாக தெரிவித்துவிட்டார். அவர் சொன்னதுதான் சரியான தகவல்” என்றார் அவர்.
வழக்கறிஞர் அணி செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரையிடம் கேட்டதற்கு, “இந்தி திணிப்பு எதிர்ப்பு, தொகுதி மறுசீரமைப்பு எதிர்ப்பு உள்ளிட்ட மாநில உரிமைகளைக் காக்கும் களம், ஏதோ தங்களுக்கு மட்டுமே உரித்தானது போன்று திமுக தொடர்ந்து கட்டமைத்து வருகிறது. அந்த பிம்பத்தை, தனது டெல்லி பயணத்தின் மூலம் பழனிசாமி தகர்த்தெறிந்துவிட்டார். இதை ஏற்க முடியாதவர்கள், பழனிசாமி பாஜக-வுடன் கூட்டணி குறித்து பேசிவிட்டு வந்ததாக தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்” என்றார் காட்டமாக. இதற்கு மேல் இனி அமித் ஷாவே வந்து, என்ன பேசினோம் என உடைத்துச் சொன்னால் தான் உண்டு!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...