Published : 28 Mar 2025 08:32 AM
Last Updated : 28 Mar 2025 08:32 AM

‘ஆக்‌ஷன்’ அமித் ஷா... சரண்டர் இபிஎஸ்..! - அடுத்தடுத்து நடக்கப்போவது என்ன?

‘2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்’- டெல்லியில் இபிஎஸ் தன்னை சந்தித்துவிட்டுச் சென்ற பிறகு உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட இந்த எக்ஸ் தள பதிவு மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி அமைவதற்கு கட்டியம் கூறி இருக்கிறது.

அமித் ஷா உடனான 45 நிமிட சந்​திப்​புக்​குப் பின் செய்​தி​யாளர்களிடம் பேசிய, இபிஎஸ். “இந்த சந்​திப்​பில் கூட்​டணி குறித்து பேசவில்​லை. கூட்​டணி வேறு, கொள்கை வேறு. தேர்​தல் நெருங்​கும்​போது சந்​தர்ப்ப சூழ்​நிலைக்கு ஏற்ப கூட்​டணி மாறும்” என்று மட்டும் சொன்​னார்.

2021-ல் பாஜக-வுடன் கூட்​டணி அமைத்​ததே தோல்விக்கு காரணம் என்று அதி​முக தரப்​பில் குரல் எழுந்​தது. இதையடுத்து பாஜக கூட்​ட​ணியை உதறிய அதி​முக தலை​மை, 2024 மக்​கள​வைத் தேர்​தலில் தனி அணி அமைத்து போட்​டி​யிட்​டது. அந்​தத் தேர்​தல் முடிவு​கள், ‘ஒன்​று​பட்​டால் உண்டு வாழ்​வு’ என்ற படிப்​பினையை இரண்டு கட்​சிகளுக்​கும் உணர்த்​தி​யது. இதனால், அதி​முக தயவு தேவை என பாஜக தரப்​பிலும், பாஜக தயவு தேவை என அதி​முக தரப்​பிலும் மறை​முக​மாக பேச ஆரம்​பித்​தார்​கள்.

இந்த நிலை​யில், அமித் ஷாவுக்கு கிடைத்த அறிக்​கை​கள் அனைத்​தும் அதி​முக-வை உள்​ளடக்​கிய வலிமை​யான கூட்​ட​ணியை அமைத்​தால் தான் திமுக-வை வீழ்த்த முடி​யும் என்​பது​தான். தொகுதி மறு​வரையறை, மும்​மொழிக் கொள்கை என தேசிய அளவில் ஒரு அணியை திமுக கட்​டமைப்​ப​தை​யும் அமித் ஷா விரும்​ப​வில்​லை. இதன் பின்​னணி​யிலேயே அமித் ஷா - இபிஎஸ் சந்​திப்பு நடந்​துள்​ளது என்​கின்​ற​னர் உள் விவ​காரங்​களை நன்கு அறிந்​தவர்​கள்.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய அவர்​கள், “2021-ல் டிடிவி தினகரன் போன்​றோரை கூட்​டணி சேர்க்​காமல், வெற்றி பெற்று ஆட்சி அமைப்​போம் என்று அமித் ஷாவிடம் வாக்​குறுதி கொடுத்து தோல்​வியை தழு​வி​னார் இபிஎஸ். 2024-ல் அதி​முக கூட்​ட​ணிக்​கான சமா​தானத்தை மறு​தலித்​து, ‘அதி​முக அல்​லாத என்​டிஏ கூட்​டணி எம்​பி-க்​கள் மக்​களவைக்கு வரு​வார்​கள்’ என்று உறுதி கொடுத்து தோல்​வியை தழு​வி​னார் அண்​ணா​மலை.

இந்த இரு​வ​ருக்​கு​மான ஈகோ யுத்​தத்​தால், தமி​ழ​கத்​தில் திமுக கூட்​டணி வீழ்த்த முடி​யாத சக்​தி​யாக பலம் பெற்று வரு​வதை உணர்ந்த அமித் ஷா, இந்த இரு​வரை​யும் தவிர்த்​து​விட்டு மற்​றவர்​கள் மூலம் கூட்​ட​ணிக்​கான வேலை​களைத் தொடங்​கி​னார். இதற்கு தடை​யாக இருந்​தால், அண்​ணா​மலை, இபிஎஸ் ஆகிய இரு​வரின் தலை​மையை மாற்​ற​வும் திட்​டங்​கள் தயா​ராகின.

லண்​டன் பயணத்​திற்கு பிறகு இதை உணர்ந்த அண்​ணா​மலை, தலை​மை​யின் முடிவுக்கு கட்​டுப்​பட்டு அதி​முக விஷ​யத்​தில் தனது அணுகு​முறையை மாற்​றி​னார். அதே​போல், ‘பாஜக-வுடன் 2026, 2029 தேர்​தல்​களில் கூட்​டணி இல்​லை’ என்று முழங்​கிய இபிஎஸ், ‘தி​முக மட்​டுமே எதிரி’ என்று அண்​மை​யில் மாற்​றிப் பேசி​னார். பாஜக-வை கடுமை​யாக எதிர்த்து வந்த ஜெயக்​கு​மார் மவுனிக்​கப்​பட்​டார்.

அடுத்த கட்​ட​மாக, பாஜக கூட்​டணி வேண்​டாம் என்​ப​தில் உறு​தி​யாக இருந்த சி.​வி.சண்​முகம், கே.பி.​முனு​சாமி ஆகி​யோரை​யும் அழைத்​துக் கொண்டு அமித் ஷாவை சந்​தித்​துப் பேசி, ‘வேறு வழி​யில்​லை’ என்ற நிலையை அவர்​களுக்​கும் உணர்த்​தி​யுள்​ளார் இபிஎஸ். பாஜக கூட்​ட​ணி​யில் இருந்து வில​கி​னால், திமுக கூட்​ட​ணி​யில் உள்ள கட்​சிகள் தங்​கள் பக்​கம் வரும் என்ற இபிஎஸ்​ஸின் கனவு பொய்த்​துப் போனது. தவெக-வுடன் கூட்​டணி என்ற அதி​முக-​வின் அடுத்த எதிர்​பார்ப்​பும் தகர்ந்து போனது.

அதோடு, அதி​முக கூட்​ட​ணி​யில் நாதக கலந்​து​வி​டா​மல் இருக்க திமுக தரப்​பில் எடுக்​கப்​பட்ட சில மறை​முக முயற்​சிகள் அந்​தக் கேட்​டை​யும் அடைத்​து​விட்​டன. ராஜ்யசபா சீட் விஷ​யத்​தில் ஏற்​பட்ட ஏமாற்​றத்​தால், பட்​ஜெட்​டுக்கு வரவேற்பு தெரி​வித்து திமுக கூட்​ட​ணிக்கு பயணிக்க தேமு​தி​க-​வும் தயா​ரானது. இது போன்ற தொடர் பின்​னடைவு​களை அடுத்தே மீண்​டும் பாஜக-வுடன் கைகோக்​கும் முடிவுக்கு வந்​து​விட்​டார் இபிஎஸ்” என்​ற​னர்.

இதனிடையே, அமித் ஷா உடனான இந்த சந்​திப்​பில் இரு கட்​சிகளுக்​கும் இடையே​யான கூட்​டணி கணக்​கு​களும் அலசப்​பட்​ட​தாகச் சொல்​கி​றார்​கள். கடந்த காலங்​களை ஒப்​பிடு​கை​யில் அதி​முக-​வின் வாக்கு வங்கி 20.46 சதவீத​மாக சரிந்​துள்​ளது. பாஜக-​வின் வாக்கு வங்கி தனிப்​பட்ட முறை​யில் 11.22 சதவீத​மாக​வும், தமிழக என்​டிஏ-​யின் வாக்கு வங்கி 18 சதவீத​மாக​வும் உள்​ளது.

2026-ல் இந்த வாக்கு சதவீதத்​தின் அடிப்​படை​யில் தொகுதி பங்​கீடு இருக்க வேண்​டும் என பாஜக தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாகச் சொல்​கி​றார்​கள். அதி​முக தலை​மை​யில் தான் கூட்​டணி என்​றாலும், தேர்​தலுக்​குப் பிறகு தமி​ழ​கத்​தில் என்​டிஏ கூட்​டணி ஆட்​சி​தான் என்ற அழுத்​த​மும் அமித் ஷா மூலம் அதி​முக-வுக்கு கொடுக்​கப்​பட்​டுள்​ளது.

முதல்​கட்​ட​மாக இதற்​கெல்​லாம் தலை​யாட்டி இருக்​கும் அதி​முக தலை​மை, அண்​ணா​மலைக்கு மாற்​றாக தமி​ழ​கத்​தில் பொறுப்​புக்​குழுவை அமைத்து தேர்​தலைச் சந்​திக்க வேண்​டும், ஓபிஎஸ், டிடிவி விவ​காரங்​களில் தங்​களை நிர்​பந்​திக்​கக் கூடாது, திமுக அமைச்​சர்​கள் மீதான வழக்​கு​களை துரிதப்​படுத்த வேண்​டும் என தங்​கள் தரப்​பிலிருந்​தும் கோரிக்​கை​களை முன்​வைத்​திருப்​ப​தாகச் சொல்​லப்​படு​கிறது.

இந்​தச் சந்​திப்​பின் போது எடுக்​கப்​பட்ட முடிவு​களின் படி, இரு தரப்​பிலும் இணக்​க​மான நடவடிக்​கை​கள் எடுக்​கப்​பட்​டு, ஜுலைக்கு பிறகு அதி​காரபூர்வ அறி​விப்பை வெளி​யிட​வும், இரு கட்​சிகளும் இணைந்து ஆளும் திமுக-வுக்கு எதி​ரான போராட்​டங்​களை நடத்தி தேர்​தல் களத்​திற்கு தொண்​டர்​களை தயார்​படுத்​த​வும் திட்​டங்​கள் வகுக்​கப்​பட்​டுள்​ளன. இந்​தத் தேர்​தலை​யும் கோட்​டை​விட்​டால் முதலுக்கே மோச​மாகி​விடும் என்​ப​தால் மீண்​டும் பாஜக-வுடன் கைகோக்க துணிந்​திருக்​கிறார் இபிஎஸ். ஆனால், அமித் ஷா என்ன கணக்கு வைத்​திருக்​கிறாரோ யாருக்குத் தெரியும்?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x
News Hub
Icon