Published : 27 Mar 2025 11:52 PM
Last Updated : 27 Mar 2025 11:52 PM
இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா என்று தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தை கடனில் மூழ்கவைத்து, வெறும் விளம்பர பட்ஜெட்டை ஸ்டாலின் தந்துள்ளார். தமிழகத்தின் இரும்பு மனிதர், உலகத் தமிழர்களின் அடையாளமாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி திகழ்கிறார். அதேபோல, இந்தியாவின் இரும்பு மனிதராக அமித்ஷா உள்ளார். இவரை பழனிசாமி சந்தித்ததுதான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகளையும் பெற்றுத் தருவதற்காகத்தான் இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. இந்த உண்மையை மறைக்க திமுக அரசு பல்வேறு செய்திகளை பரப்புகிறது.
தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்ட நிலுவை நிதியை உடனடியாக வழங்க வேண்டும். கல்வித் திட்டத்தில் தர வேண்டிய நிதியை தாமதமின்றி விடுவிக்க வேண்டும் என்று மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை, வல்லபபாய் படேலின் மறுஉருவமாக இருக்கும் அமித்ஷாவிடம் பழனிசாமி எடுத்துரைத்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர வேண்டும். தொகுதி மறுவரையறையில் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது. கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளையும் பழனிசாமி முன்வைத்துள்ளார்.
ஆனால், இந்த சந்திப்பு குறித்து அவரவர் தாங்கள் விரும்பும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இருவர் சந்திப்பு குறித்து ஜெயலலிதா பேரவைத் தொண்டர்கள் திண்ணைப் பிரச்சாரமாக மக்களிடம் கொண்டுசெல்வர்.
ஆட்சி அதிகாரம் இல்லை என்றாலும், தமிழக மக்களுக்காக பழனிசாமி உழைத்து வருகிறார். ஆனால், தற்போது ஒரு குடும்பம், ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு, தமிழக நலனை பற்றி சிந்திக்காமல் குடும்ப நலனை மட்டுமே சிந்திக்கிறது. இவ்வாறு ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...