Published : 27 Mar 2025 09:59 PM
Last Updated : 27 Mar 2025 09:59 PM
சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக உசிலம்பட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ நீதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஒருவாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்படும், என தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக உசிலம்பட்டி தாலுகா சந்தைப்பட்டியைச் சேர்ந்த ஆர். கண்னன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், "கடந்த 2016 - 2021 காலகட்டத்தில் உசிலம்பட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ-வாக பதவி வகித்த பி.நீதிபதி, வருமானத்துக்கு அதிகமாக தனது மனைவி ஆனந்தி, மகள் ஜெயதேவி மற்றும் மகன் இளஞ்செழியன் ஆகியோரது பெயரில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல் பெறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் ஆதாரங்களுடன் புகார் அளித்தும் போலீஸார் நீதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சொத்து குவிப்பு வழக்குப்பதியவில்லை. எனவே நான் அளித்துள்ள மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்", எனக்கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கோபிநாத் ஆஜராகி, உசிலம்பட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ நீதிபதிக்கு எதிராக அளி்க்கப்பட்ட புகார் மீதான ஆரம்பகட்ட விசாரணை முடிவடைந்து விட்டது. தற்போது நீதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிய ஊழல் கண்காணிப்பு பிரிவு இயக்குநர் அனுமதியளித்துள்ளார். எனவே முன்னாள் எம்எல்ஏ நீதிபதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வாரத்துக்குள் சொத்து குவிப்பு வழக்கு பதியப்படும், என்றார். அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment