Published : 27 Mar 2025 10:03 PM
Last Updated : 27 Mar 2025 10:03 PM
சென்னை: “பல்வேறு நெருக்கடிகளால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் நான், கட்சியின் முன்னணி நிர்வாகிகளின் அணுகுமுறைகளாலும் காயப்பட வேண்டியிருக்கிறது” என்று உருக்கமாக கூறியுள்ள விசிக தலைவர் திருமாவளவன், பேட்டி கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என கட்சியினருக்கு கட்டுப்பாடு விதித்துள்ளார்.
இது குறித்து ஃபேஸ்புக் நேரலையில் அவர் பேசியது: “கட்சி வளர்ச்சியடையும்போது முன்னணி தலைவர்களிடையே முதிர்ச்சி வெளிப்பட வேண்டும். ஆனால், அவர்களோ சமூக வலைதளங்களில் கட்சிக்கும் தலைமைக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலேயே கருத்துகளை பகிர்ந்து கொள்வது வேதனையளிக்கிறது.
பல்வேறு நெருக்கடிகளால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் நான், கட்சியின் முன்னணி நிர்வாகிகளின் அணுகுமுறைகளாலும் காயப்பட வேண்டியிருக்கிறது. முரண்பாடுகளை சமூக வலைதளங்களில் பதிவிட கூடாது. அரைவேக்காட்டு தனத்தை அள்ளி இறைக்க வேண்டாம். இதை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இதை கூறி வருகிறேன்.
யூடியூப் சேனல்களில் யாராவது பேட்டிக்கு அழைத்தால், சேனலின் பின்னணி குறித்து ஆராயாமல் வாய்ப்பு தருகிறார்கள் என்ற அடிப்படையில் பங்கேற்பது கவலையளிக்கிறது. தொலைக்காட்சிகளாக இருந்தாலும், யூடியூப் சேனலாக இருந்தாலும் பேரவைத் தேர்தல் முடியும் வரை பேட்டி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் தலைமையிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அணுகுமுறையை நிர்வாகிகள் பெற வேண்டும்.
தேர்தல் நெருங்கும் நேரம். கூட்டணி அமைப்பதற்கான உத்திகளை பெரிய கட்சிகள் கையாண்டு வருகின்றன. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்திருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வாறு தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் இந்த நேரத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கோபி நயினார் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டி, அவர் திராவிடர் கழகம் குறித்து பேசிய கருத்து, இதையடுத்து விசிகவினர் மனம்போன போக்கில் சொல்லும் கருத்துகள் யாவும் கட்சி நலனுக்கு உகந்தவை அல்ல. கட்சியினர் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்” என்று திருமாவளவன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...