Last Updated : 27 Mar, 2025 06:26 PM

 

Published : 27 Mar 2025 06:26 PM
Last Updated : 27 Mar 2025 06:26 PM

மண்டபத்துக்கு பதில் அழகன்குளத்தில் அருங்காட்சியகம் அமையுமா? - தொல்லியல் துறை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: அழகன்குளம் அகழாய்வுப் பொருட்களுக்கு மண்டபத்தில் அருங்காட்சியம் அமைப்பதற்கு பதில், அழகன்குளத்திலேயே அருங்காட்சியம் அமைக்கக் கோரும் மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தைச் சேர்ந்த என்.பி.அசோகன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: 'ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் இரு பக்கம் கடலாலும், ஒரு பக்கம் வைகை நதியாலும் சூழப்பட்ட ஊராகும். அழகன்குளத்தில் தான் வைகை ஆறு வங்காள விரிகுடாவில் கலக்கிறது. அழகன்குளம் கோட்டைமேடு பகுதியில் 1984-ல் பழங்கால நாணயம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அழகன்குளத்தில் அகழாய்வு நடத்தப்பட்டது.

கடந்த 1986- 87ல் நடைபெற்ற முதல் அகழாய்வில் மண்பாண்டங்கள், ரோமனியர் காலத்து மது கோப்பைகள், ஓவியம் வரையப்பட்ட பானைகள் மற்றும் 4ம் நூற்றாண்டின் நாணயங்கள் உட்பட பல்வேறு பழங்கால பொருட்கள் கிடைத்தன. இப்பொருட்கள் 2360 ஆண்டு பழமையானது என்பது கார்பன் பரிசோதனையில் உறுதிபடுத்தப்பட்டது.

இரண்டாவது அழகாய்வில் பாண்டியர் காலத்து மீன் சின்னம் பொறிக்கப்பட்ட யானை தந்தத்தில் செய்யப்பட்ட நாணயம் கிடைத்தது. பின்னர் 1993 முதல் 1997 வரையும், இறுதியாக 2016- 2017 ஆண்டிலும் அகழாய்வு நடைபெற்றது. இந்த அகழாய்வுகளில் நான்காம் நூற்றாண்டின் வெள்ளி நாணயங்கள், பாண்டியர் கலத்தின் சதுர வடிவிலான நாணயம், தட்டு ஒடுகள், இரும்பு வாள், யானை தந்தத்தில் செய்யப்பட்ட ஆபரணங்கள், ஆம்பர் ஒயின் கிளாஸ், ரோமானியர்களின் முத்திரைகள், இரும்பு கம்பி உட்பட 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டட பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த அகழாய்வுகளின் மூலம் அழகன்குளத்தில் 2400 ஆண்டுக்கு முன்பு பரபரப்பான துறைமுகம் இயங்கி வந்ததும், கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுடன் வர்த்தகம் நடைபெற்று வந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அழகன்குளத்தில் அகழாய்வு நடைபெற்ற இடங்களைப் பாதுகாக்கவும், அகழாய்வில் கிடைத்த பொருட்களை அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்தவும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது அகழாய்வு நடைபெற்ற இடங்கள் மூடப்பட்டு கருவேல மரங்கள் வளர்ந்து புதர் போல் காட்சியளிக்கிறது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு நடைபெற்ற இடத்தின் அருகே அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு அங்கு கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அழகன்குளம் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்களுக்காக மண்டபத்தில் அருங்காட்சியம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மண்டபம் அழகன்குளத்தில் இருந்து 27 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கு அருங்காட்சியகம் அமைப்பதால் பலனில்லை. எனவே அழகன்குளத்தில் அகழாய்வு நடைபெற்ற இடங்களை பாதுகாக்கவும், அழகன்குளத்தில் அருங்காட்சியகம் அமைக்கவும், அழகன்குளத்தில் 2016- 2017ல் நடைபெற்ற அகழாய்வு அறிக்கையை வெளியிடவும் உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதி ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், ''மனுதாரர் கோரிக்கை தொடர்பாக அளித்த மனுவை தொல்லியல் துறை இயக்குனர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x