Last Updated : 27 Mar, 2025 06:34 PM

5  

Published : 27 Mar 2025 06:34 PM
Last Updated : 27 Mar 2025 06:34 PM

ஓய்வூதிய பணப் பலன்களை உடனே வழங்க அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

மதுரை: ‘போக்குவரத்து கழகத்தில் நிதி நெருக்கடி உள்ளது. அதனால் ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது’ என்ற பதிலை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம், பணப் பலன்களை உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளது.

கோவை அரசுப் போக்குவரத்துக் கழகம் பழனி கிளையில் தேர்வு நிலை உதவிப் பொறியாளராக பணிபுரிந்து 2024-ல் ஓய்வு பெற்றவர் செளந்திரராஜன். இவர் தனக்குரிய வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை, விடுப்பு ஊதிய பாக்கி ரூ 78,33,778 வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமா்வில் ரிட் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது போக்குவரத்து கழக நிர்வாகம் சார்பில், அரசு போக்குவரத்து கழகங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கிறது. ஓய்வூதியர்களுக்கான பணப்பலன்கள் நவ.2022 வரை தீர்வு செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் அவரின் சீனியாரிட்டி வரும் வரை காத்திருக்க வேண்டும் என பதிலளிக்கப்பட்டது.

இதையேற்க மறுத்து, மனுதாரரின் வருங்கால வைப்பு நிதித் தொகையில் 50 சதவீதத்தை 2024 ஜூலைக்குள் வழங்க வேண்டும். பணிக்கொடை உள்ளிட்ட பிற பலன்களை இந்தாண்டு ஜூலைக்குள் வழங்க வேண்டும் என தனி நீதிபதி கடந்தாண்டு அக்டோபர் மாதம் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அரசுப் போக்குவரத்து கழகம் திருப்பூர் மண்டலம் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. செளந்திரராஜன் தரப்பில் வழக்கறிஞர் ஏ.ராகுல் வாதிட்டார்.

பின்னர் நீதிபதிகள், பணப்பலன்கள் போக்குவரத்து ஊழியர்களுக்கு தானமாக வழங்குவது இல்லை. பணப்பலன்கள் வழங்க தாமதம் ஏற்படுவதற்கு நிதி நெருக்கடியை காரணமாக கூறுவதை ஏற்க முடியாது. மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.

மற்றொரு வழக்கு: கும்பகோணம் போக்குவரத்துக் கழகம் நாகை மண்டலத்தில் பணிபுரிந்து 2024-ல் விருப்ப ஓய்வு பெற்றவர் திருமறைநாதன், தனக்குரிய ஓய்வூதியப் பலன்கள் ரூ 56,72,236-யை உடனடியாக தீர்வு செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

மனுவில், இருதய நோய் காரணமாக விருப்ப ஓய்வு பெற்றேன். விருப்ப ஓய்வு பெற்றால் பணப்பலன்கள் கிடைக்கும், அதை வைத்து மருத்துவ சிகிச்சை மேற்கெள்ளலாம் என நினைத்திருந்தேன். ஆனால் ஓய்வு பெற்று பல மாதங்களாகியும் எனக்கு பணப்பலன்கள் தரவில்லை. இதனால் மருத்துவ செலவுக்கு வட்டிக்கு கடன் வாங்கியுள்ளேன். எனக்குரிய பணப்பலன்களை நிறுத்தி வைக்க போக்குவரத்து கழகத்துக்கு உரிமையில்லை. எனவே, பணப்பலன் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி பட்டுதேவானந்த் விசாரித்தார். அரசு போக்குவரத்து கழகம் சார்பில், போக்குவரத்து கழகத்தில் நிதி நெருக்கடி உள்ளது. அரசிடம் நிதி கேட்டுள்ளோம். அதனால் மனுதாரருக்கு பணப்பலன் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையேற்க மறுத்து, மனுதாரருக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். பணப்பலன் தாமதத்துக்கு 6 சதவீத இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x
News Hub
Icon