Published : 27 Mar 2025 03:52 PM
Last Updated : 27 Mar 2025 03:52 PM

பள்ளிகளில் சிசிடிவி முதல் ஃபுட் ஸ்ட்ரீட் வரை மதுரை மாநகராட்சி பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்

மதுரை மாநகராட்சியில் மேயர் இந்திராணி பட்ஜெட் தாக்கல் செய்தார் | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: மதுரை மாநகராட்சியில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வருவாய் ரூ.1,439.40 கோடியாகவும், செலவினம் ரூ.1,480.13 கோடியாகவும் மதிப்பிடப்பட்டு ரூ.40 கோடி பற்றாக்குறை பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் பற்றி விவாதிக்க அனுமதி கோரி மாநகராட்சி அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா தலைமையில் அக்கட்சி கவுன்சிலர்கள் கூச்சல் போட்டனர். அவர்களுக்கு எதிராக திமுக கவுன்சிகளும் குரல் எழுப்பியதால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

மதுரை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யும் கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. ஆணையர் சித்ரா, துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். மேயர் பட்ஜெட்டை வாசிக்க தொடங்கியதும், மாநகராட்சி அதிமுக எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா தலைமையில், அக்கட்சி கவுன்சிலர்கள் எழுந்து, பட்ஜெட் ஏழை, நடுத்தர மக்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும், அவர்கள் நலனை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும் என்றனர்.

மேலும், பட்ஜெட்டை பற்றி விவாதிக்க எதிர்கட்சி கவுன்சிலர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றனர். அவர்களை அமர சொல்லி கோஷமிட்ட திமுக கவுன்சிலர்கள், “பட்ஜெட்டை வாசிக்கவில்லை, அதற்குள் குறை சொல்லக்கூடாது, வெற்று அரசியலுக்காக பேசக்கூடாது, அமருங்கள்,” என்றனர். சில நிமிடங்கள் நீடித்த திமுக-அதிமுக கவுன்சிலர்கள் கூச்சல் முடிந்தபிறகு, மேயர் இந்திராணி பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கினார்.

அதிமுக கவுன்சிலர்கள்

2025-2026 நிதி ஆண்டில் மாநகராட்சியின் மொத்த வருவாய் ரூ.1,439.40 கோடியாகவும், செலவினம் ரூ.1,480.13 கோடியாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதனால், ரூ.40 கோடி பற்றாக்குறை பட்ஜெட்டாக மேயர் தாக்கல் செய்தார். மேயர் இந்திராணி பொறுப்புக்கு வந்தபிறகு தற்போதுதான் முதல் முறையாக பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெடில் குறிப்பிட்டுள்ளவை பற்றி மேயர் இந்திராணி பேசியதாவது: மாநகராட்சியால் ஈட்டப்படும் ஒவ்வொரு ரூபாயும் எந்த அளவு திறமையாக செலவிடப்படுகிறது என்பதை விளக்குவதே பட்ஜெட்டின் நோக்கம். இந்த பட்ஜெட் வெறும் செலவினத்தை மட்டும் இலக்காக கொண்டதல்ல, சாதனை, இலக்கை எய்தல், செலவினத்தின் மதிப்பை ஆய்தல் போன்றவற்றையும் அடிப்படையாக கொண்டது. மாநகராட்சி பள்ளிகளில் படித்த இரண்டு மாணவர்கள் மருத்துவப் படிப்புகளிலும், ஒரு மாணவி பல் மருத்துவத்திலும், 6 மாணவர்கள் பொறியியல் படிப்பிலும் சேர்ந்துள்ளனர்.

மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள், மனநல பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மாட்டுத்தவாணி பேருந்து நிலைய கழிப்பறைகள் மட்டுமில்லாது, தற்போது கீழசித்திரைவீதி, தெற்கு சித்திரை வீதி, தமுக்கம் மைதானம், மாநகராட்சி வளாகப்பகுதியில் உள்ள கழிப்பறைகள் இலவசமாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ரூ.1609.69 கோடியில் நிறைவேற்றப்படும் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப்பணி 90 சதவீதம் முடிந்துள்ளது.

மக்கள் தொகை பெருக்கத்தை அடிப்படையாக கொண்டு இந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது. பாத்திமா கல்லூரி முதல் பரவை மார்க்கெட் வரை ரூ.1.45 கோடியிலும், குருவிக்காரன் சாலை முதல் விரகனூர் சந்திப்பு வரை ரூ.1.55 கோடியில் தெருவிளக்குகள் அமைக்கப்படுகிறது. மாநகராட்சியில் ரூ.314 கோடியில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. பெரியாறு பேருந்து நிலையத்தில் ரூ.112 கோடியில் கட்டிய வணிக வளாகம் விரைவில் திறக்கப்பட உள்ளது.

புதிய அறிவிப்புகள்:

  • மாநகராட்சி தூய்மைப்பணியாளர் குழந்தைகளின் கல்வி கற்கும் ஆர்வத்தினை மேம்படுத்தும் நோக்கில் 10ம் வகுப்பு, ப்ளஸ்-2 தேர்வுகளில் ஒவ்வொரு பாடத்திலும் முதல் 3 இடங்களை பெறுவோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
  • மாநகராட்சியின் 24 பள்ளிகளில் அதிவீன படிப்பகங்கள் (Smart Reading Room) ரூ.3 லட்சம் வீதம் பல்துறை அறிஞர்களை கொண்டு அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.75 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மாநகராட்சி பள்ளி மாணவர்கள் தமிழ் மொழியின் தொன்மை, கலாச்சாரம், எதிர்கால படிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள அறிவுசார் சான்றோரை கொண்டு வழிகாட்டுதல், ஊக்குவித்தல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
  • மாநகராட்சி மைய அலுவலகத்தில் ரூ.15 லட்சத்தில் வார இதழ்கள், தினசரி பத்திரிக்கைகள் மற்றும் பிற நூல்களை ஒருங்கிணைத்து நூலகம் அமைக்கப்படும்.
  • மாநகராட்சி பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள், ஒளிஒலி அமைப்புகள் ரூ.2 கோடியில் ஏற்படுத்தப்படும்.
  • மாநகராட்சி உரக்கிடங்கு அமைந்துள்ள வெள்ளக்கல் பகுதியில் சுற்றுச்சூழல் துறை பங்களிப்புடன் பசுமை வனக்காடுகள் அமைக்கப்படுகிறது.
  • மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • உணவு சுற்றுலா முக்கியத்துவம் பெறும் மதுரையில், மாட்டுத்தாவணி பகுதியில் ரூ.3 கோடியில் உணவு வீதி (Food Street) அமைக்கப்படுகிறது.
  • மாநகராட்சிக்குட்பட்ட மேம்பால ஓரங்களில் அலங்கார மின்விளக்குகள், அலங்கார செடிகள் அமைத்து அழகுப்படுத்த ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • மாநகராட்சிப்பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் சாலைகளை கண்டறிந்து ‘ஸ்மார்ட் ரோடு’(Smart Road) அமைக்கப்படும்.
  • மாகநராட்சிப் பகுதிகளில் ரூ.10 கோடியில் இரு அறிவியல் பூங்கா அமைக்கப்படும்.
  • மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்கா ரூ. 2கோடியில் பராமரிக்கப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.

‘பட்ஜெட் உடைந்த அப்பளம்’ அதிமுக விமர்சனம்: மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், “மாநகராட்சி பட்ஜெட்டில் புதிதாக எதுவும் இல்லை. அரைத்த மாவையே மீண்டும் அரைத்துள்ளனர். அதனால், பட்ஜெட் அப்பளம் போல் உடைந்துப் போய்விட்டது. தரமான குடிநீர், சுகாதாரம், விடுப்பட்ட வார்டுகளில் தெருவிளக்கு, சாலைகள், பிரதான மழைநீர் கால்வாய்களை தூர்வார வேண்டும், கழிவுநீரை முழுமையாக சுத்திரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் போன்றவைதான் மக்களின் எதிர்பார்ப்புகள். ஆனால், இதற்கான மேம்பாட்டு திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை,” என்றார்.

பொறுப்பு இல்லாத கவுன்சிலர்கள்: பட்ஜெட் தாக்கல் கூட்டம் 10.30 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 11 மணிக்கு மிக தாமதமாக தொடங்கியது. மேயர் இந்திராணி, சுமார் ஒரு மணி நேரம் பட்ஜெட்டில் குறிப்பிட்ட சிறப்பு அம்சங்களை வாசித்தார். கவுன்சிலர்கள் இதுவரை நடந்த கூட்டங்களில், கழிவுநீர், சாலைகள், தெருவிளக்கு, குடிநீர், மாநகராட்சி பள்ளிகள் போன்றவை பற்றி பொதுமக்களுக்காக பலமுறை பேசியிருப்பார்கள். இவை தொடர்பாகதான் மேயர் பட்ஜெட்டில், அடுத்த ஒரு ஆண்டில் மாநகராட்சி நிறைவேற்றப்போகும் திட்டங்கள், அறிவிப்புகள், மாநகராட்சியின் நிதி நிலை, செலவினங்கள் போன்ற முக்கியமானவற்றை குறிப்பிட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால், பெரும்பாலான கவுன்சிலர்கள் , அவரது பேச்சை சுத்தமாக கேட்கவே இல்லை. மண்டலத் தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், கவுன்சிலர்கள், தங்கள் பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டது மட்டுமில்லாது அடுத்தடுத்த இருக்கைகள், எதிர் திசையில் இருப்பவர்களையும் சத்தம் போட்டு அழைத்தும், சைகை காட்டியும் சத்தமாக தங்களை மறந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, கவுன்சிலர்களுக்கான வார்டு நிதி சென்ற ஆண்டைபோல் ரூ.25 லட்சம் ஒதுக்கப்படும் என மேயர் அறிவித்தார்.

ஆனால், தொகை விவரத்தை முழுமையாக கேட்காத கவுன்சிலர்கள், மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர். அதிமுக கவுன்சிலர், வார்டு நிதி கூட்டவில்லை, இது போன ஆண்டு நிதிதான் என்றதால் கூட்டத்தில் சிரிப்பலை ஏற்பட்டது. சுதாரித்துக் கொண்ட திமுக கவுன்சிலர்கள், மேயரிடம் முறையிட்டனர். மேயர், ஆணையர் சித்ராவிடம் அவர்களது கோரிக்கையை பரிந்துரைத்தார்.

கவுன்சிலர்கள் இந்த பொறுப்பில்லாத செயல், பேச்சு, சிரிப்பு, சத்தங்களுக்கு மத்தியில் மேயர் பட்ஜெட்டை வாசித்து முடித்தார். கவுன்சிலர்களின் இந்த பொறுப்பற்ற செயல், மாமன்ற கூட்டத்தை பார்க்க வந்த பொதுமக்கள், அதிகாரிகளை முகம் சுழிக்க வைத்தது. கவுன்சிலர்கள் அரசியல்வாதிகள் என்பதால் அவர்களை அழைத்து கண்டிக்கவும், கட்டுப்படுத்தவும் முடியாமல் கூட்டரங்கில் அதிகாரிகள் அமர்ந்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x