Published : 27 Mar 2025 03:37 PM
Last Updated : 27 Mar 2025 03:37 PM
தூத்துக்குடி: திமுகவை தவிர எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி இல்லை. ஒத்த கருத்துடைய கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் நேற்று உடல்நலக் குறைவால் காலமானார். இவரின் உடல் இன்று திருநெல்வேலியில் அடக்கம் செய்யப்பட்டது. ஆகவே, கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் வருகை தந்தார்.
பின்னர், கார் மூலம் திருநெல்வேலியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு சென்னை செல்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த அவர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், உள்துறை அமைச்சரை சந்தித்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிலுவைத் தொகையை பல்வேறு திட்டத்திற்கு விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்திருக்கின்றேன்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு வர வேண்டிய நீதி தாமதமாகி உள்ளது. அது தொடர்பாகவும் கோரிக்கை மனு அளித்துள்ளோம். அண்ணா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இரு மொழிக் கொள்கையே தொடர வேண்டும் என்பதுதான் நிலைப்பாடு. அதனை வலியுறுத்தியும் மனு கொடுத்துள்ளோம்.
ஓபிஎஸ் நானும் பிரிந்தது, பிரிந்தது தான். இனி சேர்வதற்கு சாத்தியம் கிடையாது.. கட்சியை எப்போது எதிரிகளிடம், அடமானம் வைத்தாரோ, கட்சியின் தலைமை கழகத்தை, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோவிலை என்று அவர் உடைத்தாரோ, அவருக்கு இந்த கட்சியில் இருப்பதற்கு தகுதி இல்லை. இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு அதிமுக ஆட்சியில் நிவாரணம் அனைத்தும் அளித்தோம். ஆனால் இந்த ஆட்சியில் அவ்வாறு இல்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தை தவிர எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி அல்ல., ஒத்த கருத்துள்ள கட்சிகளை நாங்கள் சேர்த்து கொள்வோம். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். சிறுமி முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
மோசமான ஆட்சி போதை பொருள் நடமாட்டத்துக்கு அளவே இல்லை. காவல்துறைக்கு அவர்கள் அச்சப்படவில்லை. சர்வ சாதாரணமாக கொலை சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காவல்துறை ஏவல் துறையாக மாறிவிட்டது என்றார். பேட்டியின் போது முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...