Published : 27 Mar 2025 01:34 PM
Last Updated : 27 Mar 2025 01:34 PM
சென்னை: இந்துக்களின் சொத்துக்களை சட்டவிரோதமாக வக்பு வாரியம் அபகரிக்க தமிழக அரசு துணை போவதாக இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முஸ்லிம்களின் ஓட்டுக்காக தமிழர்களின் அடிப்படை உரிமையை மறுக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் துணைபோகிறார்.
இன்று தமிழக சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசு கொண்டு வரும் வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் தாக்கல் செய்வதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோதுதான் வக்பு வாரியத்திற்கு வானளாவிய அதிகாரத்தை வழங்கி அநியாயம் செய்தது. இதன் மூலம் முறைகேடாக எந்த ஆதாரமும் இல்லாமல் அரசின் சொத்துக்களை, இந்துக்களின் பாரம்பரிய சொத்துக்களை வக்பு சொத்து என்று ஆக்கிரமிக்கும் போக்கு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான் மத்திய அரசு, வக்பு வாரிய திருத்த சட்டம் குறித்து மக்களின் கருத்தை கேட்டு ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. இதனை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்ததால் மத்திய அரசு நாடாளுமன்றக் கூட்டுக்குழுவை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற கூட்டுக்குழு நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் அந்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளது.
இந்நிலையில் வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் தாக்கல் செய்யவுள்ளது. வக்பு வாரிய சொத்து பிரச்சினை தமிழகத்தில் இல்லையா? அரசுக்கு அதைப்பற்றி தெரியாதா? பாதிக்கப்பட்டவர்களின் கதறல் காதில் விழவில்லையா?
எவ்வித ஆவணமும், ஆதாரமும் இல்லாமல் இந்துக்களின் சொத்துக்களை வக்பு வாரிய சொத்து என குறிப்பிட்டு பல பேர்களின் தலையில் மண் அள்ளிப் போட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது தமிழ்நாடு வக்பு வாரியம்.
உதாரணமாக திருச்சி மாவட்டம் திருச்செந்துறையில் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் உள்பட சுமார் 375 ஏக்கர் நிலங்கள் வக்பு வாரிய சொத்து என்று கூறியது. அங்குள்ள இந்துக்கள் தங்கள் சொத்துக்களை விற்பதற்கு வக்பு வாரியத்திடம் தடையில்லாத சான்றிதழ் (NOC) வாங்கி வரும்படி பதிவாளர் கூறினார். அப்போதுதான் தமிழர்களுக்கு வக்பு வாரியத்தின் சொத்து அபகரிப்பு பித்தலாட்டம் தெரியவந்தது.
அதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதி, ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை, பவானி பகுதி, திண்டுக்கல் மாவட்டம் பழனி, பாலசமுத்திரம், நெல்லை மாவட்டம் பழைய பேட்டை, ராணிப்பேட்டை வேப்பூர், சென்னை திருவல்லிக்கேணி என பல பகுதிகளில் இந்துக்களின் சொத்துக்களை வக்பு வாரிய சொத்து என்று எந்த ஆதாரமும் ஆவணமும் இல்லாமல் உரிமை கொண்டாடியது வக்பு வாரியம்.
மக்களின் எதிர்ப்பின் காரணமாக நயவஞ்சகமாக ஒரு சதியை தமிழக அரசு செய்தது. அது தற்காலிகமாக வக்பு வாரிய தடையில்லா சான்றிதழ் இல்லாமல் பத்திர பதிவை செய்ய மாவட்ட ஆட்சியர் அதிகாரத்தை பயன்படுத்த வைத்தது.
தங்கள் சொத்துக்களை வக்பு வாரியம் சட்டவிரோதமாக அபகரிக்க திமுக உள்பட அரசியல் கட்சிகள் துணைபோகின்றன என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு முறைப்படி பணத்தை கொடுத்து சட்டப்படி வாங்கி பதிவு செய்த சொத்துக்களை கள்ளத்தனமாக வக்பு வாரிய சொத்து என்று அபகரிப்பது குறித்து பாஜக தவிர மற்ற அரசியல் கட்சிகள் வாயை திறக்கவில்லை.
இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வரும் வக்பு வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து தமிழக முதல்வர் கொண்டு வரும் தீர்மானம் தமிழக மக்களுக்கு விரோதமானது. மத்திய அரசு கொண்டு வரும் வக்பு வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து மாநில அரசு கொண்டு வரும் தீர்மானத்தின் உள்நோக்கத்தை தமிழக மக்கள் உணர வேண்டும்.
மத்திய அரசு கொண்டு வரும் வக்பு திருத்த மசோதாவை தமிழக மக்கள் பகிரங்கமாக ஆதரிக்க வேண்டும். அப்போதுதான் பாரம்பரியமான நமது சொத்துக்களை பாதுகாத்து கொள்ள முடியும்.
இந்துக்களின் சொத்துக்களை சட்டவிரோதமாக வக்பு வாரியம் அபகரிக்க தமிழக அரசு துணை போவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது" என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...