Published : 27 Mar 2025 01:21 PM
Last Updated : 27 Mar 2025 01:21 PM
சென்னை: “சிறுபான்மை, பெரும்பான்மை என்று பிரித்துப் பார்த்து அரசியல் செய்கின்ற திமுகவின் வழக்கமான அரசியலுக்காக இன்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து, நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த தீர்மானத்தை பாஜக எதிர்ப்பதாக கூறி வெளிநடப்பு செய்திருக்கிறோம்.” என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
பேரவையில் இன்று (மார்ச் 27) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசின் வக்பு சட்டத்திருத்தத்துக்கு எதிரான அரசின் தனித்தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இந்த தனித்தீர்மானத்தைப் புறக்கணித்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக அரசு ஒவ்வொரு நாளும் புதிதுபுதிதாக கணக்குகளைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் தமிழக மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவதையும், அதை தீர்ப்பதற்கு கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, மத்திய அரசுக்கு எதிராக ஏதாவது ஒரு வகையில் ஒரு தீர்மானத்தையோ அல்லது ஏதாவது ஒரு பிரகடனத்தையோ கொண்டுவந்து மக்களை திசைத்திருப்ப முயற்சி செய்கிறார்கள். அதற்கு இன்னுமொரு சாட்சியாக இந்த தீர்மானத்தை நாங்கள் பார்க்கிறோம்.
இந்த நாட்டில் இருக்கக்கூடிய இஸ்லாமிய, கிறிஸ்தவ, இந்து மக்களுக்கும் அரசியலமைப்புச் சட்டம் சமமான உரிமைகளை வழங்கியிருக்கிறது. ஒரு மதத்தைப் பின்பற்றுவதற்கும், வழிபாடு நடத்துவதற்கும் எந்தவிதமான பிரச்சினையும் கிடையாது. சட்டம் அதை முழுமையாக அனுமதிக்கிறது. மத்திய அரசு முழுமையாக அதைப் பாதுகாக்கிறது. ஆனால், இந்து மக்களுக்காக அவர்கள் நிர்வாகம் செய்கின்ற கோயில்களுக்கு எல்லாம் தனியாக ஒரு அமைச்சரை நியமித்துவிட்டு, மதசதந்திரம் பற்றி எங்களுக்கு பாடம் எடுக்கிறார் முதல்வர்.
இந்த தீர்மானத்துக்கு முன்பாக அவர் பேசிய ஒவ்வொரு விஷயங்களையும் கூர்ந்து கவனித்தால், இந்தியாவில் இருக்கும் அத்தனை வக்பு சொத்துகளும், நேர்மையான வழியில், வெளிப்படையான முறையில் சரியான முறையில் நிர்வாகம் செய்வதற்காக, நாடாளுமன்றக் கூட்டுக்குழு நாடு முழுவதும் மக்கள் கருத்துகளைக் கேட்டு அந்த திருத்தங்களைக் கொண்டு வந்தது. சிறுபான்மை, பெரும்பான்மை என்று பிரித்துப் பார்த்து அரசியல் செய்கின்ற திமுகவின் வழக்கமான அரசியலுக்காக இன்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து, நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த தீர்மானத்தை பாஜக எதிர்ப்பதாக கூறி வெளிநடப்பு செய்திருக்கிறோம். இந்த சட்டப்பேரவையில் நிறைவேற்றுவதற்கு இரண்டு விஷயங்களைக் கூறினேன். நாடாளுமன்றக் கூட்டுக்குழு அத்தனை அரசியல் கட்சிகளு்ககும் வாய்ப்புக் கொடுத்தது.
திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர், நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும், நாடாளுமன்றக் கூட்டுக்குழுவிடம் தங்கள் கருத்தைத் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த மாநில சட்டப்பேரவை தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசுக்கு ஒரு அதிகார வரம்பு இருக்கிறது.
சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுக்கு எப்படி அதிகாரம் இருக்கிறதோ, அதுபோல மத்தியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக அரசுக்கு சட்டம் கொண்டு வருவதற்கு அதிகாரம் இருக்கிறது. இங்கு, மாநில சட்டப்பேரவையில் ஒரு சட்டத்தைக் கொண்டு வருகிறபோது, தமிழகத்தில் இருக்கிற ஏதாவது ஒரு மாநகராட்சியோ, பஞ்சாயத்தோ தீர்மானம் போட்டால் எப்படி இருக்குமோ, அதுமாதிரியான சூழல் ஏற்பட்டு விடக்கூடாது.
ஏனெனில், தமிழக சட்டப்பேரவைக்கு ஒரு நீண்ட பாரம்பரியமும், பெருமையும் இருக்கிறது. அதை அரசியலுக்காக, செய்கின்ற செயலின் காரணமாக அந்த மாண்பைக் குறைத்துவிடக்கூடாது என்ற கருத்தை நான் வலியுறுத்தினேன்.” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...