Published : 27 Mar 2025 12:41 PM
Last Updated : 27 Mar 2025 12:41 PM
தூத்துக்குடி: “அதிமுக தொண்டர்களின் கோயிலாக இருக்கும் தலைமைக்கழக அலுவலகத்தை ஓ.பன்னீர்செல்வம் என்று உடைத்தாரோ, அப்போதே, அவர் கட்சியில் இருப்பதற்கான தகுதியில்லாதவர் ஆகிவிட்டார். அதனடிப்படையில், அவரை கட்சியில் இணைத்துக் கொள்வதற்கு வாய்ப்பே கிடையாது” என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 27) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து, தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகளை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்திருக்கிறேன். நூறுநாள் வேலைத்திட்டத்துக்கு மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்கு வரவேண்டிய நிதி தாமதப்படுகிறது. எனவே, அதை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவாக கொடுத்திருக்கிறேன்.
எஸ்எஸ்ஏ கல்வித் திட்டத்துக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறேன். தமிழகத்தில் இருமொழிக் கொள்கைத் தொடர வேண்டும் என்பது அதிமுகவின் கொள்கை, நிலைப்பாடு. அதுவே தொடர வேண்டும் என்பதையும் எங்களது கோரிக்கை மனுவில் வலியுறுத்தியிருக்கிறோம்.
கட்சியில் ஓபிஎஸ்-ஐ இணைப்பதற்கு சாத்தியமே கிடையாது. பிரிந்தது, பிரிந்ததுதான்.பிரிந்தது மட்டுமல்ல, அதிமுகவை எதிரிகளிடம் அடமானம் வைப்பதை எங்களால் தாங்க முடியவில்லை.
அதிமுகவின் தலைமை அலுவலகத்தில், ஓபிஎஸ் தனது தலைமையில் ரவுடிகளைக் கூட்டிச் சென்று, அதிமுக தொண்டர்களின் கோயிலாக இருக்கும் தலைமைக்கழக அலுவலகத்தை என்று உடைத்தார்களோ, அப்போதே, அவர்கள் கட்சியில் இருப்பதற்கு தகுதியில்லாதவர்கள் ஆகிவிட்டனர். அதனடிப்படையில், அவர்களை கட்சியில் இணைத்துக் கொள்வதற்கு வாய்ப்பே கிடையாது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். நாங்களும் சேர்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
அண்ணாமலை டெல்லி சென்றதற்கான காரணத்தை அவரிடம்தான் கேட்க வேண்டும். மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். இலங்கை கடற்படை திட்டமிட்டு தமிழக மீனவர்களைத் தாக்கி, படகுகளை சேதப்படுத்தி, மீன்களை கொள்ளையடிப்பது கண்டனத்துக்குரியது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 11 மாத காலம் இருக்கிறது. 11 மாதங்களுக்கு முன்பு எந்த செய்தி சொன்னாலும் அது நிலைக்காது. எனவே, கூட்டணி அமைக்கும்போது, ஊடகங்களையும், செய்தியாளர்களையும் அழைத்து தெரிவிப்போம். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறும். அப்படி நடக்கும்போது முழுமையான தகவல் கொடுக்கப்படும்.
அதிமுகவைப் பொருத்தவரை, திமுக-வைத் தவிர மற்ற எந்தக்கட்சியும் எங்களுக்கு எதிரி இல்லை. தேர்தல் நேரத்தில், ஒத்தக் கருத்துடைய கட்சிகள் யாரெல்லாம் எங்களோடு இணைகிறார்களோ அவர்களை எல்லாம் நாங்கள் சேர்த்துக்கொள்வோம். ஆட்சியைப் பிடிப்பதற்கு தேவையான இடங்களைவிட கூடுதல் இடங்களில் அதிமுக வெற்றி பெறும்.
தமிழகத்தில் மோசமான ஆட்சி நடைபெறுகிறது. போதைப்பொருட்கள் நடமாட்டத்துக்கு அளவே இல்லை. குற்றச்செயல்களில் ஈடுபடுகிறவர்கள் காவல்துறைக்கு பயப்படுவதே இல்லை. சர்வசாதாரணமாக கொலைகள் நடக்கிறது. இதை தடுத்து நிறுத்த திறமையற்ற அரசுதான், ஆளும் திமுக அரசு” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...